மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் சரண்: போலீசார் விசாரணை

பெங்களூரு: மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார். மங்களூரு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, தேசிய அளவில் பரபரப்பை   ஏற்படுத்தியது. ஆனால், அந்த வெடிகுண்டுகளில் டைமர் ஏதும் இல்லாததால் அன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், விமான நிலையத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக, மாநில அரசுகளை மத்திய உளவுத்துறை எச்சரித்துளளது. இதுபோன்ற நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை அதிகமாக்கியது.

இதற்கிடையில், ஆட்டோவில் வந்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து விட்டு தலைமறைவாக இருந்த மர்ம மனிதரை கண்டுபிடிப்பதற்காக மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு பல இடங்களில் தேடி வந்தனர். அவர் உடுப்பியில் பதுங்கி இருப்பதாகவும், அவர் பஸ் மூலம் உடுப்பிக்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் வடகர்நாடகத்திற்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின. இந்நிலையில், மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ஆதித்யா ராவ் என்ற அந்த நபர் தாமாக வந்து அர்சூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவரை ஆட்டோவில் அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் நேற்று தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: