×

சுற்றுலா தலமான ஏலகிரி மலை சாலையில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் வெள்ளை நிற உருவத்தால் பீதி: அடிக்கடி விபத்து ஏற்படுவது ஏன்? பரபரப்பு தகவல்கள்

ஜோலார்பேட்டை: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலை சாலையில் இரவு நேரத்தில் சுற்றித்திரியும் வெள்ளை நிற உருவத்தால் பீதி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் 2 நாள் கோடை விழா அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் சுற்றுலா பயணிகளை திருப்பத்தூர் பகுதியில் இறக்கி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் ஏலகிரி மலை இரண்டாவது வளைவில் வந்து கொண்டிருந்தார்.  

அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெள்ளை நிறத்தில் உருவம் ஒன்று சாலையை கடந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்துள்ளது. இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த டாக்சி டிரைவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு செல்போன் மூலம் வீடியோ எடுத்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து அந்த உருவம் மாயமாகிவிட்டது. இதையடுத்து, டாக்சி டிரைவர் காரை மெதுவாக இயக்கிக் கொண்டு மலைக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து, அவர் சக நண்பர்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் வெள்ளை நிற உருவம் அவ்வப்போது சாலையை கடந்து சென்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஏலகிரி மலை சாலையில் சுற்றுலாவிற்கு வருபவர்கள் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பும்போது கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது. இந்த விபத்துகள் குறித்து ஏலகிரிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் வாகன ஓட்டிகள் யாரும் மது அருந்தவில்லை என தெரியவந்தது. மேலும், அவர்கள் கூறுகையில், ‘வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென சுயநினைவிழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படுகிறது’ என்று கூறுகின்றனர். இதுபோன்று கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம் மற்றும் கார் என 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்துகளுக்கும், இரவு நேரத்தில் 12 மணி அளவில்  வாகன ஓட்டிகள் செல்லும் போது செல்லும் வெள்ளை நிற உருவத்திற்கும் சம்பந்தம் உள்ளது என வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று நாளான தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக வீடு திரும்பும்போது 9வது வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளம்பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது கணவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஆவியாக ஏலகிரி மலை சாலையில் வலம் வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் மலைச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறதா? இரவு நேரத்தில் மலைச் சாலையில் சுற்றித்திரியும் வெள்ளை நிற ஆவி அவர்தானா? என்று வாகன ஓட்டிகளிடையே சந்தேகம் எழுந்து பீதியை கிளப்பியுள்ளது.


Tags : White Elephant, Panic, Yelgiri Mountain Road Sensational,information
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...