×

இவுக மகனுக்கும், அவுக மகளுக்கும் ‘டும்டும்’ நடக்க இருந்தநிலையில் அவனோட அப்பாவும்இவளோட அம்மாவும் ‘ஜூட்’: நின்று போனது திருமணம்

சூரத்: குஜராத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஒருவரை ஒருவர் விரும்பியதால் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், சூரத் கட்டர்கம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (48) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகனுக்கும் நவ்சாரியை சேர்ந்த வைர கைவினைஞரின் மகளுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பே பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் 2ம் வாரத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில், மணமகனின் தந்தை திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இவர் டெக்ஸ்டைல் தொழிலதிபர். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. மேலும், அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 10ம் தேதி முதல் ராகேஷை காணவில்லை. இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதேபோல், மணமகளின் தாய் ஸ்வாதியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாயமாகி உள்ளார். இது தொடர்பாக அந்த குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் மாயமானதால் இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே ராகேசும், ஸ்வாதியும் இளம் வயதாக இருக்கும்போது கட்டர்கமில் அருகருகில் வசித்து வந்ததாகவும், இருவரும் நண்பர்களாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அப்போதே இருவரும் காதலித்து வந்ததாகவும், எதிர்பாராத விதமாக ஸ்வாதி வைர கைவினைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும் நண்பர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் வீட்டை விட்டு வெளியேறியிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.



Tags : Jude ,Dumdum ,walk , Her son, daughter, is married
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு