×

நேபாளத்துக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்: ரிசார்ட்டில் கேஸ் கசிந்து விபத்து கேரளாவை சேர்ந்த 8 பேர் பலி

காத்மாண்டு; நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தபோது ரிசார்ட் அறையில் கேஸ் கசிந்து ஏற்பட்ட விபத்தில் கேரளாவை சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகினர். கேரளாவை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு, நேபாளத்தில் உள்ள பிரபலமான மலைவாழிடமான பொஹ்ராவுக்கு சுற்றுலா சென்றது. அங்குள்ள மகாவான்பூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு சுற்றுலா சென்ற அவர்கள், இந்தியா திரும்பும் வழியில் எவரெஸ்ட் பனோராமா என்ற ரிசார்ட்டில் 4 அறைகள் எடுத்து தங்கினர். அதில் ஒரு அறையில் 8 பேரும், மற்ற அறைகளில் மீதமுள்ள 7 பேரும் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு கடும் குளிர் நிலவியதால் அறையில் குளிர் காய்வதற்காக 8 பேர் இருந்த அறையில் ஒருவர் சிலிண்டரை பற்றவைத்தார்.

அப்போது அறைக்கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மேலும் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்திருந்ததாக தெரிகிறது. திடீரென தீப்பற்ற வைத்ததால் அறை முழுவதும் தீப்பற்றியது. இதில் 2 ஜோடி, 4 குழந்தைகள் என 8 பேருக்கு  மூச்சுச்திணறல் ஏற்பட்டது. மயங்கி கிடந்த அவர்களை மற்ற அறையில் இருந்த பயணிகள் மீட்டு விமானம் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 8 பேரும் மூச்சுதிணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர்கள் பர்வீன் கிருஷ்ணன் நாயர், சரண்யா சசி, ஸ்ரீபத்ர பிரவீன், ஆர்ச்சா பிரவீன், அபினவ் சரண்யா நாயர், ரஞ்சித் குமார், இந்து லட்சுமி, வியாஸ்னவ் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்திய மருத்துவர்கள் குழு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது,’ என்றார்.

கேரள முதல்வர் வேண்டுகோள்
நேபாளத்தில் நிகழ்ந்த கேஸ் விபத்து பற்றி தகவல் அறிந்த கேரள முதல்வர் பினராய் விஜயன், இறந்த 8 கேரள சுற்றுலா பயணிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி கேரள அரசு சார்பில் வேண்டுகோள் விடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதில், நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற கேரளாவை சேர்ந்த 8 பேர் கேஸ் கசிந்த விபத்தில் இறந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இறந்த 8 பேர் உடல்களையும் விரைவில் கேரளாவுக்கு கொண்டு வர பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் பிரதே பரிசோதனைக்கு பிறகு இன்று கேரளாவுக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Tags : resort resort ,accident ,Kerala , Nepal, Resort, Gas, Accident, Kerala, 8 killed
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு