×

இளைஞர் உலக கோப்பையில் அபாரம் ஜப்பானை நசுக்கியது இந்திய அணி

புளோயம்போன்டீன்: தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை மிக எளிதாக வீழ்த்தியது. மங்காங் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா யு-19 அணி முதலில் பந்துவீசியது. இந்திய பவுலர்களின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய ஜப்பான் 22.5 ஓவரில் 41 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர்கள் கேப்டன் மார்கஸ் துர்கேட் 1 ரன், ஷு நோகுச்சி 7 ரன் எடுக்க, அடுத்து வந்த 5 வீரர்கள் தொடர்ச்சியாக டக் அவுட்டாகி அணிவகுத்தனர்.

டோபெல் (7) - கிளமென்ட்ஸ் (5) ஜோடி 8வது விக்கெட்டுக்கு 13 ரன் சேர்த்தது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. இந்தியா யு-19 பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 8 ஓவரில் 3 மெய்டன் உட்பட 5 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். கார்த்திக் தியாகி 3, ஆகாஷ் சிங் 2, வித்யாதர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா யு-19 அணி 4.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தி 2 புள்ளிகள் பெற்றது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), குமார் குஷக்ரா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஏ பிரிவில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 3வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் நியூசிலாந்து யு-19 அணியை சந்திக்கிறது.

Tags : India ,World Cup ,Japan , India beat Japan ,World Cup
× RELATED கணுக்காலில் 3 ஊசி…ஹர்திக் உருக்கம்