×

வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் இந்தியாவுக்கு ஓட்டம் பிடித்தவர்களுக்கு கிடுக்கிப்பிடி : ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இந்தியாவிற்கு தப்பி வந்தவர்கள் மீது இந்தியாவில் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவியது; இதற்கு  தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியாவில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என‌ தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ)இந்திய தூதர் பவன் கபூர்  அளித்த பேட்டி: அமீரகத்தில் சிவில் நீதிமன்றங்களில் தனி நபர் கடன்,வங்கி கடன் என பல்வேறு வழக்குகள் தொடரப்படுகிறது.குறிப்பாக இந்தியர்களில் சிலர்  யுஏஇ. யில் இருந்தபோது,  வங்கி மற்றும் தனிநபர் கடன்களை திருப்பி செலுத்தாமல் இந்தியாவுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தீர்ப்புகள் வந்தாலும், அவர்கள் அரபு குடியரசில் இல்லாததால் தீர்ப்பை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில்  இந்தியாவில் கடந்த 18ம் தேதி சட்டத்துறை சார்பில்  அரசு கெஜடில் இந்திய சிவில் நடைமுறை சட்டத்தின்  கீழ் பிரதேச பரிமாற்றம் என்ற முறையை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமீரகத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை இந்தியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் செயல்படுத்த இந்த புதிய அரசாணை வழிவகை செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 1999ம் ஆண்டிலேயே அமீரக அரசும் மற்றும் இந்திய அரசும் கையெழுத்திட்டது. ஆனால் சில சட்ட நடைமுறை காரணமாக முழுமையாக செயல்படுத்தபடாமல் இருந்து வந்தது. தற்போது அரசாணை வெளியிடப்பட்டதால் முழுமையாக இம்முறை அமல்படுத்தப்படும். அமீரக நீதிமன்றங்களின் மத்திய உச்ச நீதிமன்றம்,அபுதாபி,சார்ஜா,அஜ்மான்,உம் அல் குவைன்,மற்றும் புஜேரா ஆகிய இடங்களில் உள்ள மேல் முறையீட்டு  நீதிமன்றங்கள், மேலும் அபுதாபி நீதித்துறை, துபாய் நீதிமன்றங்கள், ராசல் கைமா நீதித்துறை ,அபுதாபி உலக வர்த்தக‌ நீதிமன்றங்கள், துபாய் சர்வதேச நிதி மைய நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் தூதரகம் மற்றும் இந்திய துணை தூதரகம் வாயிலாக இந்தியாவில் உள்ள அந்தந்த மாவட்ட முதன்மை நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும். நிதி மோசடி செய்தவர்கள் மீது இந்த நீதிமன்றங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும். இவ்வாறு இந்திய தூதர் கூறினார்.

விவாகரத்து வழக்கில் தப்பமுடியாது


அமீரகத்தில் கடன்,செக் மோசடி மட்டுமல்ல, விவாகரத்து உள்ளிட்ட சிவில் வழக்குகளின் தீர்ப்புகள் இந்தியாவில் நிறைவேற்றப்படும். அமீரக்தில் வாங்கிய கடன்களை செலுத்தாமல் யாரும் இந்தியா தப்பி செல்ல முடியாது. அவர்கள் இந்திய நீதிமன்றங்கள் வாயிலாக தண்டிக்கப்படுவர்’ என்றும் தூதர் தெரிவித்தார்.


Tags : United Arab Emirates Action Loan ,UAE ,India , UAE civil court verdicts against loan defaulters can be executed in India
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...