×

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பெரம்பூர்: சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் வரும் 27ம் தேதி வரை 31வது சாலை பாதுகாப்பு வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், அங்கு ஹெல்மெட் அணியாமல் வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து 100க்கும் அதிகமான பெண்கள் ஹெல்மெட் அணிந்தபடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  இருந்து புளியந்தோப்பு நெடுஞ்சாலை சந்திப்பு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியை புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெய்கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு நோட்டீஸ் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வாரம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வருபவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தெரிவித்தார்.

Tags : Helmet Awareness Rally , Helmet awareness rally, Road Safety Week
× RELATED உத்திரமேரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி