×

விஷ வாயு தாக்கி 2 பேர் பலியான விவகாரம் கான்டிராக்டர், சூப்பர்வைசர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே கழிவுநீர் தொட்டிக்கு வெல்டிங் வைத்தபோது விஷ வாயு தாக்கி இரு தொழிலாளிகள் பலியான விவகாரத்தில் கான்டிராக்டர், சூப்பர்வைசர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம்,  ஐஸ்வந்த் நகரில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையம் உள்ளது. இங்கு உள்ள கழிவுநீர் தொட்டிக்கு இரும்பாலான மூடி அமைக்கும் பணி நேற்று முன்தினம் மதியம் நடந்தது. இந்த பணியில் நொளம்பூரை சேர்ந்த கான்டிராக்டர் சுரேஷ் தலைமையில் பாடி, என்.எஸ்.கே தெருவைச் சார்ந்த கண்ணன் (45),  கொளத்தூர், ரெட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது 6 மீட்டர் ஆழமுள்ள தொட்டிக்கு மேல் நின்று கண்ணன், பிரகாஷ் இருவரும் வெல்டிங் வைத்தனர். அப்போது திடீரென பிரகாஷ் கால் தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற கண்ணன் கயிறு கட்டி கழிவுநீர் தொட்டியில் இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்த கான்டிராக்டர் சுரேஷ் (36), நாமக்கல், புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூப்பர்வைசர் கார்த்திக் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,poison gas attack , Two persons killed , poison gas attack
× RELATED விசாகப்பட்டினம் அருகே ராசாயன ஆலையில்...