×

எளியவர்கள் உயர்நிலைக்கு வர காரணமாவர் பெரியாரின் கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு

சென்னை: எளியவர்கள் உயர்ந்த நிலைக்கு வர காரணமானவர் பெரியார். அவரைப்பற்றி பேசும் போது அவரது கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்துகொண்டுதான் பேச வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் 13 நாட்கள் நடத்திய 43வது சென்னை புத்தக காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு, பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு துணை முதல்வர் விருதுகளை வழங்கினார். அவர் பேசியதாவது:  புத்தக வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசு அயல் நாடுகளுக்கும் தமிழ் நூல்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் யாழ்பாணம் மற்றும் மலேசியாவிற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இளம் எழுத்தாளர்கள் தோல்வியை கண்டு சோர்வடையாமல் தொடர்ந்து எழுத வேண்டும்.

 புதிய சிந்தனைகளை முற்போக்கு எண்ணங்களை எழுத்து வடிவில் தரும் செயலை இளம் எழுத்தாளர்கள் ஒருபோதும் நிறுத்தக்கூடாது. பதிப்பாளர்களின் சமுதாய பணிக்கு தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். பபாசியின் வளர்ச்சிக்காக எனது சொந்த நிதியில் இருந்து முதல் தவணையாக ரூ.5 லட்சம் தருகிறேன். இன்னமும் தருவேன் தந்துகொண்டே இருப்பேன் என்றார். புத்தக காட்சி நிறைவு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘‘தன்னைப்போன்ற எளியவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார் தான் காரணம். அவரைப்பற்றி பேசும் போது பெரியாரின் கருத்துக்களை முழுமையாக படித்து தெரிந்துகொண்டு பேச வேண்டும்’’ என்றார்.

20 கோடி புத்தகங்கள் விற்பனை
 பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் பேசுகையில், ‘‘சுமார்  800க்கும் மேற்பட்ட அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள்  இடம்பெற்றிருந்தன. புத்தக காட்சிக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் நாட்டின்  பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 13  லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு புத்தக  காட்சியில் சுமார் ₹20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை  செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 20 சதவீத வாசகர்கள் இந்த  ஆண்டு புத்தக காட்சிக்கு வருகை தந்துள்ளனர்’’ என்றார்.

Tags : Periyar ,OBS , High, Periyar, ops
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...