×

களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்: கால்தடங்கள், எச்சங்கள் சேகரிப்பு

களக்காடு: களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்களை கணக்கெடுப்பு குழுவினர் சேகரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 500 ச.கி.மீ. பரப்பளவில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு புலி, சிறுத்தை, யானை, கரடி, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்தாண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. இதை களக்காடு வனசரகர் புகழேந்தி தொடங்கி வைத்தார். இப்பணியில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.  இவர்கள் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவில் 4 முதல் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. அப்போது செல்போன் ஆப்பை எப்படி பயன்படுத்துவது, படிவங்களில் தகவல்களை பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிந்ததும் மதியத்திற்கு பின் கணக்கெடுப்பு குழுவினர் களக்காடு, திருக்குறுங்குடி கோதையாறு வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். களக்காடு வனசரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்தில் 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 28ம் தேதி வரை தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல், மரங்களில் காணப்படும் நககீறல்களை பதிவு செய்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். முதல் 3 நாட்கள் மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் தாவர உண்ணிகள் ஒட்டுண்னிகள் பற்றியும் கணக்கெடுப்பர். இதில் சேகரிக்கப்படும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் டேராடூனில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நடைபெறும் ஆராய்ச்சிக்கு பின் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 


Tags : Kalakkad Tiger Reserve: Collection of Footprints , Kalakkad Tiger Reserve, Wildlife and Footprints
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...