×

தமிழ் கலைக்கழகத்தில் 54வது கூட்டம் இன்று நடைபெறுகிறது

* 550 கலைச்சொற்கள் ஆய்வு  
* பலதுறை அறிஞர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் `தமிழ்க் கலைக்கழகம்’’ என்ற அமைப்பை தமிழக அரசு தோற்றுவித்தது. இந்நிலையில், “செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் செயல்பட்டு வரும் தமிழ் கலைக்கழகமானது  மாதமொன்றுக்கு ஆயிரம் தமிழ் கலைச்சொற்களை வடிவமைத்து வெளியிடும் வகையில், தொடர் செலவினமாக ஆண்டுக்கு ரூ.1,56,000 செலவில் புதுப்பிக்கப்படும்” என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கிணங்க 01.01.2019 முதல் மாதம் இரு முறை கலைக்கழக கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டங்களில், அகரமுதலி பதிப்பாசிரியர்கள், உதவி பதிப்பாசிரியர் மற்றும் தொகுப்பாளர்கள் ஆகியோர் மக்களின் நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சு வழக்கிலும், ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வழங்கப்படும் பிறமொழி கலைச்சொற்களை தொகுத்து அவற்றிற்கு தாங்களே வடிவமைக்கும் தமிழ் கலைச்சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த சொற்களை அகராதியியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், தமிழறிஞர்கள், கணினி வல்லுநர்கள், இதழியலாளர்கள், மருத்துவ துறையினர் உள்ளிட்ட பலதுறை அறிஞர்களை கொண்ட தமிழ் கலைக்கழகத்தின் வல்லுநர் குழு ஆராய்ந்து சீர் செய்து ஒப்புதலளித்த பின் அரசாணை பெறப்பட்டு, sorkuvai.com என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று (புதன்) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில் தமிழ் கலைக்கழகத்தின் 54வது கூட்டம் காலை 10 மணியில் இருந்து மாலை 5 வரை நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் 550 கலைச்சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. கூட்டத்தில் பல துறை அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : meeting ,Tamil University , Tamil University, 54th Meeting, Today
× RELATED டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில்...