×

மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் பற்றிய குறிப்பு இல்லாமல் காலியாக இருக்கும் தகவல் பலகை

சென்னை: மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மெரினா கடற்கரையில் பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி செய்துள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலைக்கு முன், அவர்களை பற்றிய சிறு குறிப்பு அடங்கிய தகவல் பலகையும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வைக்கப்பட்டது. அதன்படி, உழைப்பாளர் சிலை, பாரதியார், மகாத்மா காந்தி உள்ளிட்ட அனைத்து சிலைக்கு முன்பும் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் பலகைகளின் ஒருபுறம் தமிழிலும், மறுபுறம் ஆங்கிலத்திலும் அந்த தலைவர் பற்றிய சிறு குறிப்பு இருக்கும். ஆனால் பல மாதங்களாக திருவள்ளுவர் சிலை முன்பாக வைக்கப்பட்டுள்ள பலகை மட்டுமே காலியாகவே உள்ளது. இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியதாவது: மெரினா கடற்கரைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் சிலைகளுக்கு முன்பாக தகவல் பலகை வைக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்கள் பற்றி வரலாற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் போற்றப்படும் திருவள்ளுவர் சிலை முன்பாக உள்ள தகவல் பலகை மற்றும் பல மாதங்களாக காலியாக உள்ளது. எனவே இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றனர். கடந்த 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த நேரத்தில் கூட இதை சரி செய்யவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

Tags : Marina beach ,Tiruvalluvar ,board , Marina Beach, Tiruvalluvar, Note, Galle, Information Board
× RELATED ஒரத்தூர் சாம்பான் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி