தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடத்த தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது இதற்கான திருப்பணிகள் தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த விழாவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை நடத்த உயர் மட்டக்குழு அமைத்து அறநிலையத்துறை செயலாளர் அசோக் டோங்ரே உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் 21 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தலைவராக சண்முகம் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களாக நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், அறநிலையத்துறை, வருவாய், பொதுப்பணித்துறை, போக்குவரத்துறை உட்பட 20 துறைகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்தல், கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்வார்கள் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: