×

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சை கண்டித்து ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற கோவை ராமகிருஷ்ணன் உள்பட 100 பேர் கைது: தொடர் போராட்டத்தால் கூடுதல் போலீஸ் குவிப்பு

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர் போராட்டத்தால் ரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகையில், 1971ம் ஆண்டு ராமர், சீதைக்கு அவமதிப்பு ஏற்படுத்தியாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை பேசினார். இதற்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதைதொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில், வரும் 23ம் தேதி, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று காலை, ரஜினிகாந்த் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘‘நான் 1971ம் ஆண்டு நடந்த சம்பவத்தை பத்திரிகை ஆதாரங்களின் அடிப்படையிலேயே பேசினேன். இதற்கு மன்னிப்பு கேட்க முடியாது’’ என்று தெரிவித்தார். அதைதொடர்ந்து ரஜினிகாந்த் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் நேற்று போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிட செம்மொழி பூங்கா அருகே ஒன்று கூடினார்.

ஏற்கனவே போலீசார் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்து இருந்த நிலையில் அனைவரும் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, செம்மொழி பூங்கா அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் திட்டமிட்டப்படி கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட பேரணியாக சென்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசார் அனைவரையும் செம்மொழி பூங்கா அருகே வழிமறித்து தடுத்து கைது செய்தனர். பின்னர் அனைவரையும் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் அமைப்பினர் தொடர் போராட்டத்தால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Coimbatore Ramakrishnan ,house ,Rajni ,Periyar ,Rajini , Periyar, controversy, condemnation, Rajini house, siege, Coimbatore Ramakrishnan, 00 people arrested
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்