×

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சியின் குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மாவட்டத் துணை ஆட்சியர் உள்ளிட்ட 6 வகை பணிகளுக்கான குரூப் 1 தேர்வு அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு, எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக 37 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகளுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. பாமகவும் இதைப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

அதன் பயனாக 2016ம் ஆண்டில் 35 ஆக இருந்த அதிகபட்ச வயது வரம்பை 37 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இது போதுமானதல்ல. 40 ஆக உயர்த்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்ட நிலையில், புதிய அறிவிக்கையில் வயது வரம்பு திரும்பவும் 37 ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தமிழகத்தை காட்டிலும் பிற மாநிலங்களில் குரூப் - 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 53 வரை உள்ளது. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் வயது வரம்பை உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது துரோகம் ஆகும். எனவே, தமிழக மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சமூக நீதியை மீண்டும் வழங்கும் வகையில், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : DNPSC Group 1 ,founder ,Ramadas , DNPSC, Group 1 Examination, Age Limit, 40, Ramadas, Emphasis
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...