×

அருப்புக்கோட்டை 9வது வார்டில் நோய் பரப்புது தூர்வாராத ஓடை: ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை: அடிப்படை வசதி மொத்தம் அவுட்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை 9வது வார்டில் தூர்வாராமல் கழிவுநீருடன் புதர்மண்டிக் கிடக்கும் ஓடையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. மேலும், போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சி 9வது வார்டில் எம்டிஆர் நகர் கிழமேல் 2வது குறுக்குத்தெரு, 3வது குறுக்குத்தெரு என பல தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தெருக்களில் போதிய சாலை வசதியில்லை. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

பாதசாரிகளின் கால்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. சரியான சாலை வசதியில்லாததால் அவசர காலங்களில் ஆட்டோக்கள் கூட வருவதில்லை. 3வது குறுக்குத் தெருவில் மையப்பகுதியில் மினிபவர் பம்ப் உள்ளது. இதன் அருகில் மரமும், சேதமடைந்த மின்கம்பமும் இருப்பதால், கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால், சுற்றிச் செல்கின்றன. ஓடையை தூவார கோரிக்கை: எம்டிஆர் நகர் கிழமேல் மெயின்ரோட்டில் பிரதான ஓடை செல்கிறது. இந்த ஓடை வழியாக தும்பைக்குளம் கண்மாய்க்கு மழைநீர் செல்கிறது. இந்த ஓடையில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கின்றன. மேலும், இதில் குப்பைகளை கொட்டுகின்றனர். ஓடையின் அருகில் உள்ள வீடுகளில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை ஓடையில் நேரரிடையாக கலக்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. மேலும், ஓடையை ஆக்கிரமித்துள்ளனர்.

தெருக்களிலிருந்து மெயின்ரோட்டுக்கு வரும் வாகனங்கள், ஓடையில் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகனங்கள் ஓடைக்குள் விழுகின்றன.  இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த ஓடையை தூர்வாரி தடுப்புச்சுவர் கட்டக்கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தாழ்வாகச் செல்லும் மின்வயர்கள்: எம்டிஆர் நகர் கிழமேல் 2வது குறுக்குத்தெருவில் மின்வயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. உயரமான மின்கம்பங்களை அமைத்து தாழ்வாகச் செல்லும் மின்வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும். இப்பகுதியில், பெண்களுக்கு கழிப்பறை வசதியில்லை.  திறந்தவெளியே கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் விஷஜந்துகள் நடமாடுவதால் பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே, 9வது வார்டில் உள்ள எம்டிஆர் நகர் கிழமேல் 2வது குறுக்குத்தெரு, 3வது குறுக்குத்தெரு பகுதியில் நவீன சுகாதார வளாகம் அமைக்கவும், பேவர்பிளாக் கற்கள் பதிக்கவும், தெருவின் மையப்பகுதியில் உள்ள மினிபவர் பம்பை ஓரமாக அமைக்கவும், வாறுகால் வசதி ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Outbreak ,Aruppukkottai ,9th Ward ,stream , Disease spreading, incessant stream in Aruppukkottai, 9th ward
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...