×

தர்மபுரி அருகே 6 தலைமுறையினர் திரண்டனர் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 138 பேர் சிறப்பு வழிபாடு: இளம் சமூகத்தினருக்கு பாரம்பரியத்தை உணர்த்தினர்

தர்மபுரி: தர்மபுரி அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தலைமுறையினர் ஒன்று சேர்ந்து, முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தர்மபுரி மாவட்டம் உங்கரான அள்ளி கிராமத்தில், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பாரம்பரிய முறையில் செக்கு மூலம் எண்ணை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். நாகரீக வளர்ச்சியால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக இவர்கள் பல்வேறு ஊர்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு இந்த சமூகத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினர், தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்ய முடிவு செய்தனர். மேலும், இளம் தலைமுறையினருக்கு குடும்ப பாரம்பரியம் மற்றும் உறவினர்களை அறிமுகப்படுத்தவும், உறவை வலுப்படுத்தி மேம்படுத்தவும்  கடந்த ஒரு மாதமாக வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர்,  இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் குடும்ப தலைமுறையினர் அனைவரையும் தேடி கண்டுபிடித்து தொடர்பு கொண்டனர்.

அதன்படி, பொங்கல் விழாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 138 பேர், உங்கரான அள்ளி கிராமத்தில் ஒன்று கூடினர். அங்குள்ள பரம்பரைக்கு சொந்தமான விவசாய நிலங்களில் சிறப்பு வழிபாடு விழா நடந்தது. இதில் தங்களது முன்னோர்களின்  புகைப்படங்களை வைத்து, 6 தலைமுறையினரும் ஒன்று கூடி வழிபட்டனர். பின்னர், 6 தலைமுறையைச் சேர்ந்த பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து, தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது. அதேபோல், இளைய தலைமுறையினருக்கு பாரம்பரியம், கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் நாட்டு மிட்டாய்கள், கல்லுருண்டை, எள்ளுருண்டை, கல்கோனா மிட்டாய், தேங்காய் பர்பி, பொரி உருண்டை, கமர்கட், ஜவ்வு மிட்டாய், பலூன்கள் ஆகியவை வழங்கப்பட்டது.


Tags : generations ,Dharmapuri , 6 generation,same family,Heritage,Young ,
× RELATED சொல்லிட்டாங்க…