×

மும்பையில் இருந்து வரும் ரயில்களில் கரப்பான் பூச்சி, எலித்தொல்லை: முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் அவதி

சேலம்: மும்பையில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு வரும் ரயில்களில் கரப்பான் பூச்சி, எலித்தொல்லை அதிகளவு இருப்பதால், பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வேயில், ஆங்காங்கே ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் பராமரிப்பு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு ரயிலும் புறப்படுவதற்கு முன் பெட்டிகளை சுத்தப்படுத்தி, பிளாட்பார்ம்களுக்கு கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இருப்பினும் சில ரயில்களில் சுகாதாரம் சரிவர இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்களில் எலி மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகளவு உள்ளது.தமிழகத்தில் சென்னையில் இருந்தும், கோவை, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்தும் இயக்கப்படும் ரயில்களில் பெரும்பாலும் எலி, கரப்பான் பூச்சித்தொல்லை இருப்பதில்லை. மாறாக மும்பை, டெல்லி உள்ளிட்ட வட மாநில பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் வரும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பூச்சித்தொல்லை அதிகளவு இருக்கிறது. மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரசில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் மிக பழையதாக உள்ளது. இந்த பெட்டிகளில் சிறிய அளவிலான பல்வேறு பூச்சிகளும், கரப்பான் பூச்சிகளும் அதிகளவு இருக்கிறது. பெட்டிக்குள் அங்குமிங்கும் சென்றபடி, பயணிகளின் உடமைகளை பதம் பார்க்கிறது.

முன்பதிவு சீட்களில் தூங்கும் பயணிகளின் காது, மூக்கிற்குள்ளும் சிறிய பூச்சிகள் சென்றுவிடுவதால், கடுமையாக அவதியடைகின்றனர். இந்த முன்பதிவு பெட்டிகளை மருந்து அடித்து, சுத்தப்படுத்த வேண்டும் அல்லது புதிய பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ரயில் பயணிகள் கூறுகையில், “சுகாதாரத்தை பேணிக்காப்பதில் ரயில்வே முன்னிலையில் இருக்கும் நிலையில், வட இந்தியாவில் இருந்து நீண்ட பயணமாக வரும் ரயில்களில் மட்டும் சுகாதாரம் சரியாக இல்லை. முன்பதிவு பெட்டிகளின் சீட் இடுக்குகளில் பூச்சிகள் அதிகளவு வசிக்கின்றன. இதனை அழிக்க பூச்சி மருந்து அடிக்க வேண்டும். பராமரிப்பு மையங்களில் நல்ல முறையில் சுத்தப்படுத்தி, அந்த பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல், பேன், சார்ஜர் பாயிண்ட் போன்ற மின் சாதனங்களையும் பராமரித்து நல்ல முறையில் இயங்கச் செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Tags : Mosquitoes ,Travelers , trains , Mumbai, Cockroaches, rats, boxes
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை