சேலம்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,155 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலமாகும். பருவமழை காலத்தின் போது பல்வேறு நோய் தொற்றுகளுக்கு பொதுமக்களும், குழந்தைகளும் ஆளாகின்றனர். குறிப்பாக தேங்கி நிற்கும் மழை நீரால், ஏடிஎஸ் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலும், பருவநிலை மாற்றம் காரணமாக காற்றின் மூலம் பரவும் எச்1என்1 பன்றிக்காய்ச்சலும் அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால், பன்றிக்காய்ச்சலுக்கு அதுபோன்று குறிப்பிடும்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அதேசமயம், மக்களின் சுய சுகாதாரம் மட்டுமே பன்றிக்காய்ச்சலை தடுக்கும் மிகச்சிறந்த வழிமுறையாகும்.
எனவே, பன்றிக்காய்ச்சல் என்றால் என்ன? அவை எவ்வாரு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் விதம், பரவாமல் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னெச்சரிக்கையாக டாமிபுளு மாத்திரைகள் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஆனாலும், பன்றிக்காய்ச்சல் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் 2015ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை 8,155 பேர், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், மாநிலம் முழுவதும் 95 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் (22.12.2019ம் தேதி வரை) தமிழகத்தில் 1,008 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய 2018ம் ஆண்டை விட குறைவு (பாதிப்பு-2,812, இறப்பு-43) என்பது, சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இந்த புள்ளி விவரங்கள், தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு தெரிவித்தவை மட்டுமே. ஆனால், உண்மையில் இந்த எண்ணிக்கையை விட அதிகமாக பன்றிக்காய்ச்சல் தாக்கம் இருந்துள்ளது.
நாடு முழுவதும் பார்க்கும் போது கடந்த ஆண்டில் 28,714 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி 1,216 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் முந்தைய 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் (பாதிப்பு-15,266, இறப்பு-1,128), கடந்த 2019ம் ஆண்டில் அதிக பாதிப்பை பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,287 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 244 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் 208 பேர், மத்திய பிரதேசத்தில் 165 பேர், குஜராத்தில் 151 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளாவில் 44 பேரும், கர்நாடகாவில் 96 பேரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
விழிப்புணர்வு இருந்தும் தயக்கம்
புளுக்காய்ச்சல் எனப்படும் பன்றிக்காய்ச்சலுக்கு டாமிபுளு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளானவர்கள் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. முழுக்க, முழுக்க சுய சுகாதாரத்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். பாதிப்பு ஏற்பட்ட உடனேயே தகுதிவாய்ந்த மருத்துவரை அணுக வேண்டும். மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள கூடாது என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர். ஆனால், இதனை கடைபிடிப்பதில் தயக்கம் காட்டுவதால், உயிரிழப்பை சந்திக்க நேர்வதாக சுகாதாரத்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.