×

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் : கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: உலக தமிழர்கள் பெருமைபடக் கூடிய வகையில், மாமன்னர் ராஜராஜ சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தின் பெருமையையும், தமிழக கட்டிடக் கலையின் சிறப்பையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிற வகையில் சீரும் சிறப்புமாய் விளங்கி வருகிறது. 1010ம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டி எழுப்பப்பட்ட தஞ்சை பெரிய கோயில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

அதையொட்டி 1996ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. இந்நிலையில், வருகிற 2020ம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் நாள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. இச்சூழலில் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதைத் தமிழ் உணர்வுள்ள அனைவரும் வரவேற்று, ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்ற ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் கோரிக்கைகளை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஏற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்த மாமன்னர் ராஜராஜ சோழன் புகழுக்கு மகுடம் வைத்தாற்போல் குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : KSAlhagiri ,Tanjay , KS,Alhagiri , conducting part , Tanjay temple
× RELATED தஞ்சையில் அமரன் திரைப்படத்திற்கு...