×

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி நீக்க முடிவு? : புதிய ரேங்க் பட்டியல் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்

சென்னை: குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வில் இருந்து தகுதி நீக்கம் செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. அந்த தேர்வர்களை நீக்கிவிட்டு புதிய ரேங்க் பட்டியலை வெளியிட நிர்வாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் (2018-2019, 2019-2020ம் ஆண்டுக்கானது) அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருந்த 9398 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தேர்வுக்கு பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். அதனால், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 16.30 லட்சத்தை தொட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடந்தது. அதன் பிறகு நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். மேலும் அங்கு தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். சொந்த மாவட்டத்திலேயே தேர்வு மையங்கள் இருக்கும்போது இவர்கள் ஏன்? இங்கு வந்து தேர்வு எழுதினர் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இங்கு ஏதேனும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை பகுதியில் தேர்வு மையங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சுமார் 50க்கும் மேற்பட்டோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி விசாரணை தொடங்கியது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்களிடம் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன. சொந்த மாவட்டத்திலேயே தேர்வு கூடங்கள் இருக்கும் போது ராமேஸ்வரம், கீழக்கரை மையத்தை ஏன் தேர்வு செய்தீர்கள். எந்த பயிற்சி மையத்தில் தேர்வுக்காக படித்தீர்கள்? இதற்கு முன்னர் எத்தனை தடவை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதியுள்ளீர்கள். குடும்ப பின்னணி என்ன போன்ற விவரங்களை கேட்டனர். சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும். அதனால் அங்கேயே தேர்வு எழுதி விட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.

தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் புதிய வினாக்கள் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கும் தேர்வும் நடத்தப்பட்டது. அதில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணும், ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் எந்தவழியில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பது கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது தொடர்பான விசாரணையை போலீசாரிடம் ஒப்படைக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து விட்டு புதிய ரேங்க் பட்டியலை வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாளில் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. 16.30 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.  தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்துவது என்பது இயலாத காரியம். ரொம்ப நாட்கள் ஆகும். அதனால், தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்களை நீக்கி விட்டு புதிய ரேங்க் பட்டியலை வெளியிட டிஎன்பிஎஸ்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படு
கிறது.

* காலியாக இருந்த 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்பட்டது.
* தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்  என்றாலும், பட்டதாரிகள்  போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர்.
* அதனால், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 16.30 லட்சத்தை தொட்டது.
* ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு  மையங்களில் தேர்வு எழுதிய 57 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு  அழைக்கப்பட்டனர்.
* அங்கு தேர்வு எழுதிய 40 பேர் முதல் 100  இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  அல்ல.


Tags : selectors ,Group 4 , Decision to disqualify ,selectors involved , Group 4 selection scams
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித்தேர்வு