×

இடைத்தரகர்கள் இனி தேவையில்லை போன் செய்தாலே வீடுகளுக்கு உடனடியாக கழிவுநீர் இணைப்பு: குடிநீர் வாரியம் அறிமுகம்

அண்ணாநகர்: சென்னை நகரில் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு தேவைப்படுபவர்கள் குடிநீர் வாரியத்துக்கு போன் செய்தால் போதும். அவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு பெறும் வகையில், கடந்த மாதம் 2ம்தேதி அழைத்தால் இணைப்பு மற்றும் இல்லந்தோறும் இணைப்பு எனும் 2 புதிய திட்டங்களை சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிமுகம் செய்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயனாளிகள் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு எந்த ஆவணமும் உடனடியாக சமர்ப்பிக்க தேவையில்லை. இணைப்பு வழங்கிய பின்னர் ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். கழிவுநீர் இணைப்பு கட்டணத்தையும் எளிய தவணை முறையில் செலுத்தலாம் என சென்னை பெருநகர குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி, 8வது மண்டலமான அண்ணாநகரில் 15 வார்டுகளிலும் ஒரு நாளைக்கு தொலைபேசி மூலம் சுமார் 150 கழிவுநீர் இணைப்புகளை மக்கள் கேட்டுள்ளனர். இந்த இணைப்புகள் அனைத்தும் அடுத்த 24 மணி நேரத்தில் வழங்கப்படும் என மண்டல குடிநீர் வாரிய அதிகாரி வைதேகி தகவல் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கு பொதுமக்கள் எவ்வித கட்டணமும் கட்ட தேவையில்லை. இதற்காக எவ்வித இடைத்தரகர்களையும் அணுகவேண்டியதில்லை என அறிவுறுத்தி வருகிறோம். நீங்கள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமோ கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 24 மணி நேரத்தில் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும். சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டம் அண்ணாநகர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது” என அவர் கூறினார்.

Tags : households ,Introduction ,drinking water board , Intermediaries, phone, house, sewer connection, drinking water board, introduction
× RELATED குடிநீர் கட்டணங்களை செலுத்த மார்ச்...