இலங்கை போரில் மாயமானவர்கள் இறந்துவிட்டனர்: அதிபர் கோத்தபயா ஒப்புதல்

கொழும்பு: இலங்கை போரில் மாயமான ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர் என இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் 30 ஆண்டு காலமாக நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சம் பேர் பலியாயினர் என கூறப்படுகிறது. இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை என கூறியது.

இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் மொத்தமே 20 ஆயிரம் பேர்தான் மாயம் என இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில், ஐ.நா ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கரை, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே கடந்த வாரம் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘தேவையான விசாரணை நடவடிக்கைகள் முடிந்த பிறகு, மாயமானவர்களுக்கு இறப்பு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ தெரிவித்தாக இலங்கை அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இறப்பு சான்றிதழ் வழங்கியபின் அந்த குடும்பத்தினருக்கு உதவிகள் அளிக்கப்படும். இந்த தீர்வு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் என அதிபர் கோத்தபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை போரில் மாயமானவர்கள் இறந்துவிட்டதாக முதல் முறையாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். இவர்தான் இலங்கை பாதுகாப்பு அமைச்சராக இருந்து, புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார். மாயமானவர்களின் பிரச்னைகளை தீர்க்க கோத்தபயா திட்டங்கள் வகுத்துள்ளதாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘இலங்கை போரில் மாயமானவர்கள், உண்மையிலேயே இறந்துவிட்டனர் என அதிபர் விவரித்துள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகளால் வலுக்கட்டாயமாக படைகளில் சேர்க்கப்பட்டவர்கள். இதை மாயமானவர்களின் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனாலும், அவர்கள் என்ன ஆனார்கள் என்பது அவர்கள் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. அதனால் மாயமானதாக கூறுகிறார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Victims ,Gotabhaya Approved ,war ,Sri Lankan ,Chancellor , Sri Lankan war, magic, dead, President Gotabhaya
× RELATED பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு எட்டயபுரத்தில் சாலை மறியல்