×

ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் இன்னிங்ஸ், 164 ரன் வித்தியாசத்தில் ரயில்வேயை வீழ்த்தியது தமிழகம்: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு

சென்னை: ரஞ்சி லீக் போட்டியில்  ரயில்வேக்கு எதிராக தமிழ்நாடு அணி இரண்டே நாளில் இன்னிங்ஸ் மற்றும் 164ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ரயில்வே அணி 76 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய தமிழகம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. அபினவ் முகுந்த் 100, சூர்யபிரகாஷ் 50 ரன் விளாசினர். தினேஷ் கார்ததிக் 57 ரன், பாபா இந்திரஜித் 2 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். கார்த்திக் மேற்கொண்டு ஒரு ரன் மட்டுமே சேர்த்து அவினாஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பாபா இந்திரஜித் 58 ரன் (118 பந்து, 8 பவுண்டரி) விளாசி வெளியேற, ரஞ்சன் பால் 20 ரன் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

தமிழகம் 91 ஓவரில் 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரயில்வே பந்துவீச்சில் ஹர்ஷ் தியாகி 5, அவினாஷ் யாதவ் 3, ஹிமான்சூ சங்வான், ஷிவேந்திர சிங் தலா ஒரு விக்கெட் வீழத்தினர். இதையடுத்து 254 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ரயில்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் தேவ்தர் 4 ரன் எடுத்திருந்தபோது நடராஜன் பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் அரிந்தம் கோஷ் 22, விக்ராந்த் ராஜ்புத் 17, மனீஷ் ராவ் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். ரயில்வே 36.4 ஓவரில் 90 ரன்னுக்கு சுருண்டது. தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 5, ஆர்.அஸ்வின் 3, டி.நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தினர். தமிழகம் இன்னிங்ஸ் மற்றும் 164 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. நடப்பு தொடரில் தமிழகத்தின் முதல் வெற்றி இது. முழுமையாக 7 புள்ளிகளை பெற்ற தமிழகம் கால் இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. எஞ்சியுள்ள 2 போட்டிகளில் பரோடா, சவுராஷ்டிரா அணிகளை சந்திக்கிறது.

Tags : innings ,Ranji Trophy League ,Railways 164 , Ranji Cup, League play, Innings, 164 runs, Railways, Fall, Tamil Nadu
× RELATED திருமண வரம் தரும் குரு பார்வை