×

பொதுத்தேர்வு குறித்து பிரதமர் இந்தியில் பேச்சு: மொழி புரியாமல் தவித்த அரசு பள்ளி மாணவர்கள்

சென்னை: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம் போக்க பிரதமர் மோடி நிகழ்த்திய உரையாடல் இந்தியில் மொழியில் இருந்ததால் தமிழக பள்ளி மாணவர்கள் மொழி புரியாமல் அவதிப்பட்டனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை(பரிட்சா பே சர்ச்சா) டெல்லியில் நடத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இது நடக்கிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்வை அதே ஸ்டேடியத்தில் ஜனவரி 16ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையும், பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி, ஓணம் பண்டிகை போன்றவை கொண்டாடப்படும் என்பதால் அந்த தேதியில் நடக்கும் நிகழ்ச்சியை ஜனவரி 20ம் தேதிக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ஒத்தி வைத்தது.  

இதன்படி நேற்று காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பள்ளி மாணவர்கள் இடையே கரைந்துரையாடினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினர். நாடு முழுவதும் நேற்று அந்த நிகழ்ச்சியை மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்பேரில் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் டிவியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர். மேற்கண்ட, பிரதமரின் இந்த உரையாடலில் அவர் இந்தியில் பேசி தேர்வை எப்படி மாணவர்கள் எதிர் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.  தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் இந்த நிகழ்ச்சியை பார்க்க  ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்தி மொழி புரியாமல் அவர்கள் தவித்தனர். மொழிப்பெயர்ப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை.

 குறிப்பிட்ட சில மாணவர்கள் இந்தி படித்திருந்ததால் அவர்கள் மட்டும் பிரதமரின் உரையாடல் புரிந்ததாக தெரிவித்தனர். பெரும்பாலான மாணவர்கள் பிரதமர் என்ன பேசினார் புரியவில்லை என்றே தெரிவித்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, இந்தி மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தமிழில் விளக்கப்படும் என்று தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால் எத்தனை பள்ளிகளில் இந்தி மொழி ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியவரவில்லை.

Tags : speech ,elections , Prime Minister's speech on Hindi elections
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு...