×

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முதல்வரிடம் அறிக்கை அளித்தார்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தனது அறிக்கையை நேற்று முதல்வரிடம் சமர்ப்பித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரை, கோவை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 2017 ஜனவரி 14 முதல் 23ம் தேதி வரை போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது.இது தொடர்பாக விசாரிக்க, விசாரணை ஆணையம் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒன்றரை மாதம் நீட்டித்து தமிழக அரசு கடந்த 15ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜல்லிக்கட்டு விசாரணை அறிக்கை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஜல்லிக்கட்டின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் எதனால் வன்முறை ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது தலைமை செயலாளர் சண்முகம் உடன் இருந்தார். விசாரணை அறிக்கை சமர்ப்பித்தாலும், அந்த அறிக்கையில் வன்முறைக்கான காரணம் என்ன என்பது பற்றி எந்த தகவலும் தமிழக அரசு வெளியிடவில்லை.

Tags : Rajeswaran ,protest ,CM , Jallikattu Struggle, Violence, Retired Justice Rajeswaran
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...