×

மூன்று தலைநகர் விவகாரம் ஆந்திராவில் வெடித்தது போராட்டம்: எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றம்

திருமலை: ஆந்திராவில் 3 தலைநகர் உருவாக்கும் விவகாரத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. தலைமை செயலகத்துக்கு அனுமதியின்றி செல்ல முயன்ற விவசாயிகள், பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பையும் மீறி மூன்று தலைநகர் ஏற்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர  மாநிலத்தில் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், அமராவதி  சட்டப்பேரவை தலைநகராகவும் , கர்னூல் உயர்நீதிமன்ற தலைநகராக  அமைக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்தார். அமராவதி தலைநகராக தொடர வேண்டும் என வலியுறுத்தி தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் 34வது நாளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், மூன்று தலைநகர்  முடிவு விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.

‘சலோ சட்டமன்றம்’, ‘ஜெயில் பரோ’ ‘ரஸ்தா ரோகோ’ என்ற கோஷங்களுடன் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இதனால், விஜயவாடா, குண்டூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆந்திராவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதில் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜ உள்ளிட்ட கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு கோதாவரி மாவட்டம், ஜக்கைய்ய பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  முன்னதாக அமராவதியை ஆந்திர தலைநகராக தொடர்ந்து  வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய நிலங்களின் வழியாக அமைச்சரவை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது  தலைமை செயலகத்திற்கு செல்ல முயன்ற விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் சட்டத்திற்குப் புறம்பாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 லட்சம் கோடி கடன் சுமை
நகராட்சிகள் வளர்ச்சித்துறை அமைச்சர் போச்சா சத்தியநாராயணா பேசியதாவது: சந்திரபாபு அரசால் கொண்டுவரப்பட்ட தலைநகர் அமராவதி வளர்ச்சி ஆணையம் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆந்திரப் பிரிவினைக்கு பிறகு தலைநகர் குறித்து மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சிவராமகிருஷ்ணன் குழு அறிக்கையை சந்திரபாபு அரசு சட்டப்பேரவையில் கூட தெரிவிக்கவில்லை. சந்திரபாபு, ஐந்து ஆண்டுகளாக கிராபிக்ஸ் மூலம் பொதுமக்களை ஏமாற்றி வந்தார். நமது மாநிலம் விவசாயத்தை சார்ந்ததுள்ளது. 5 ஆண்டுகளில் 66 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் கோடிக்கு மேல் கடன்கள் உள்ளன. இந்நிலையில் பெரு நகரங்களை உருவாக்க முடியுமா? கடந்த அரசு, வருங்கால தலைமுறையினர் பாதிக்கும் விதமாக ஆலோசனையற்ற முடிவுகளை எடுத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

விசாகையில் ராஜ்பவன்
குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் மூன்று தலைநகர் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்து நிதியமைச்சர் ராஜேந்திரநாத் பேசுகையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் சம வளர்ச்சி அடைய செய்வதே அரசின் லட்சியம். இதற்காகவே மூன்று தலைநகருக்கான மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் ராஜ்பவன், அரசு தலைமை செயலகம் இருக்கும். கர்னூலில் புறநகர் மேம்பாட்டு வளர்ச்சி ஆணையம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அமராவதியில் மெட்ரோபாலிட்டன் அத்தாரிட்டி ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றார்.


Tags : Andhra Pradesh ,fight , The three capital, Andhra Pradesh, the struggle, the bill passed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி