தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கொண்டாட வேண்டும்: எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழாவை மிக சிறப்பாக, எழுச்சியாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.  ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வருவாய் துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை (பிப்ரவரி 24ம் தேதி) எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி.

ஜெயலலிதா பேரவை சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். முதியவர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை கொடுங்கள், அன்னதானம் வழங்குங்கள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்குங்கள், அவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள். மருத்துவமனையில் இருக்கிற நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு பழங்கள், பால், ரொட்டி போன்றவற்றை வழங்கலாம்.  நாம் போட்ட திட்டங்கள், இன்னும் முழுமையாக கிராமத்தில் இருந்து நகரம் வரை உள்ள மக்களுக்கு போய் சேரவில்லை. அதை, நம்முடைய நிர்வாகிகள் புரிய வைக்க வேண்டும். 1985ம் ஆண்டில் நானும்  ெஜயலலிதா பேரவையில் இருந்தவன். ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக, எழுச்சியாக, அனைத்து மக்களும் போற்றுகிற, பாராட்டுகிற அளவிற்கு அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Jayalalithaa ,Birthday ,Tamil Nadu Jayalalithaa ,Tamil Nadu , Tamil Nadu, Jayalalithaa Birthday, Edappadi
× RELATED ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் அன்னதானம்