×

‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்வதற்கு வசதியாக 1,500க்கும் மேற்பட்ட பஸ்களில் ஜிபிஎஸ் கருவி: விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

சென்னை: சென்னையில் அரசு பஸ்கள் எப்போது வரும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக 1,500க்கும் மேற்பட்ட எம்டிசி பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு போக்குவரத்துத்துக்கழகங்கள் சார்பில் தினசரி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பஸ்களில் பெரும்பாலானவை சரியான நேரத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. இதனால், பஸ் ஸ்டாண்டுகளில் பலமணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பஸ்கள் எப்போது வரும் என்பதை பஸ் ஸ்டாண்டிலேயே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் ‘லேம்ப்-ஆப்’யை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், சுமார் 1,500க்கும் மேற்பட்ட எம்டிசி பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பஸ் எங்கிருக்கிறது, எப்ேபாது வரும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ‘லேம்ப்-ஆப்’யை (லொக்கெட் அன்ட் அசெஸ் மை பஸ்) அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ‘ஆப்’யை பஸ்சில் பயணிக்க விரும்பும் பயணி, முன்னதாக தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது, ‘ஆன்ட்ராய்டு’ மற்றும் ’ஐஓஎஸ்’ இயங்குதளங்களில் இலவசமாக கிடைக்கும். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘ஆப்’பிற்குள், பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் பயணி செல்லும் போது, அதில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரும் பஸ்களின் விபரம் தெரியவரும். ஒருமுறை பயணி தான் பயணத்தை தொடங்கும் பஸ் ஸ்டாப்பின் விபரத்தை பதிவு செய்து விட்டால், அவ்விடத்திற்கு சம்பந்தப்பட்ட நேரத்தில் வரும் பஸ்களின் விபரத்தை தெரிந்துகொள்ள முடியும். மேலும் ரூட் நம்பரும் இடம்பெறும். இதன்மூலம் பயணிக்கு தேவையான ரூட்டை தேர்வு செய்து, அவ்வழியாக இயக்கப்படும் பஸ்களை எளிதாக அறிந்துகொள்ளலாம்.  

இந்த ‘ஆப்’ஆனது, ‘கூகுள் மேப்’ன் உதவியுடன் இயங்கும். முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படும் 3,300 எம்டிசி பஸ்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன்பிறகு மற்ற கோட்டங்களிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் என மொத்தமாக, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக அனைத்து அரசு பஸ்களிலும் ‘ஜிபிஎஸ்’ பொருத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தற்போதுவரை 1,500க்கும் மேற்பட்ட பஸ்களில் ஜிபிஎஸ் கருவி ெபாருத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பஸ்களிலும் பொருத்தப்படும். இத்திட்டத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : launch , Lamp-App, GPS Tool
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!