×

அழகுக்கலை நிபுணர்கள், தச்சர்கள் உட்பட பிளம்பர், எலக்ட்ரீஷியன்களுக்கும் ஜிஎஸ்டி பதிவு கட்டாயம் ஆகிறது: மத்திய அரசு புது திட்டம்

புதுடெல்லி: பிளம்பர், எலக்ட்ரீஷியன்கள், அழகுக்கலை நிபுணர்கள் ஆகியோரும் ஜிஎஸ்டியில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிளம்பர், எலக்ட்ரீஷியன், அழகுக்கலை நிபுணர்கள் உட்பட பலரின் சேவைகளை சில ஆன்லைன் நிறுவனங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்துகின்றன. வீட்டில் பிளம்பிங் வேலை அல்லது எலக்ட்ரீஷியன் வேலை இருந்தால், இந்த ஆன்லைன் நிறுவனங்களின் இணையதளத்தில் பதிவு செய்தாலே போதும். அடுத்த சில மணி நேரங்களில் வீட்டுக்கே வந்து விடுவார்கள்.

சாதாரணமாக வீட்டுக்கு அருகில் உள்ள பிளம்பர், எலக்ட்ரீஷியன் போன்றவற்றுகள் கூட, வாடிக்கையாளர்களை பிடிக்க ஆன்லைனில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இத்தகைய தொழில் நிபுணர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முக்கிய காரணம், தாங்கள் இருக்கும் பகுதியில் தெரிந்தவர்கள் மூலம் ஆர்டர் கிடைக்காவிட்டாலும், ஆன்லைன் மூலம் ஏதாவது ஒரு ஆர்டர் கிடைத்து விடும் என்பதுதான். இவர்களுக்கு கட்டணத்தை பணமாக அளிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவன இணையதளத்திலேயே செலுத்தலாம்.

முறைசாரா தொழிலாளர்களாக உள்ள இவர்களை ஒழுங்குபடுத்தும் வகையில், இவர்களுக்கு ஜிஎஸ்டி பதிவை கட்டாயம் ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இவர்களின் வருவாய் விவரத்தையும் அரசால் தெரிந்து கொள்ள முடியும். இவர்களின் ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சத்துக்கு குறைவாகத்தான் உள்ளது. இதனால் இவர்களுக்கு ஜிஎஸ்டி கட்டாயம் இல்லை. இருப்பினும் ஜிஎஸ்டி பதிவை கட்டாயம் ஆக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரிவு துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளம்பர், எலக்ட்ரீஷியன் போன்றவர்களும், பிட்னஸ் பயிற்சியாளர், அழகுக்கலை நிபுணர்கள் போன்றவர்கள் வீடுகளுக்கே சென்று பணி செய்து தருகின்றனர். இவர்களை அரசால் அடையாளம் காண முடிவதில்லை. இவர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்தாலும், கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், ஆன்லைன் நிறுவனங்கள், தங்களிடம் பதிவு செய்து வைத்துள்ள எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்டோரின் பணி விவரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை தக்க வைக்க முடியும்.

அரசிடம் இவர்களின் விவரங்கள் இருந்தால், வீடுகளில் இவர்கள் வேலைக்கு சென்ற இடத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர். ஆன்லைன் நிறுவனங்கள், தங்களிடம் பதிவு செய்து வைத்துள்ள பிளம்பர் எலக்ட்ரீஷியன் விவரங்களை சேமித்து வைத்துள்ளன. இதனால், ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தாலும், அந்த நிறுவனத்தின் மூலம் அவர்களை எளிதாக பிடித்து விடலாம். இவ்வாறு இருக்க, ஜிஎஸ்டியில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்குவது, பிளம்பர் எலக்ட்ரீஷியனின் வேலையில் கிடைக்கும் வருவாயை அறிந்து, பின்னாளில் வரி வசூலிக்கும் திட்டமாகவும் இருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

* பிளம்பிங், எலக்ட்ரீஷியன், அழகுக்கலை நிபுணர்கள், பிட்னஸ் பயிற்சியாளர்கள், வீடுகளை சுத்தம் செய்வது, பூச்சித்தொல்லையை ஒழிப்பது, தச்சு வேலை செய்பவர்கள் ஆன்லைன் இணையதளங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
* இவர்களின் ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சத்துக்கு குறைவாகத்தான் உள்ளது. இதனால் இவர்களுக்கு ஜிஎஸ்டி கட்டாயம் இல்லை. இருப்பினும் ஜிஎஸ்டி பதிவை கட்டாயம் ஆக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
* இவர்கள் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்று அரசு கூறினாலும், இவர்களின் வருவாய் விவரங்களை அரசு அறிந்து கொள்வதும் இதன்மூலம் எளிதாகும்.

Tags : plumber ,electricians ,aesthetists ,Government , Beauticians, Carpenters, Plumber, Electrician, GST Registration, Mandatory, Federal Government, New Project
× RELATED நாகர்கோவிலில் 2 பைக்குகள் மோதி பிளம்பர் பலி