×

மேட்டுப்பாளையம் முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து ரஷ்ய கலைஞர்களை உற்சாகப்படுத்திய ரெட்டை திருப்பதி யானை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி துவங்கிய இந்த முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்த முகாமினை பார்க்க ரஷ்யா நாட்டு கலாசார நடனக் குழுவினர் நேற்று வந்தனர். இந்தியா, ரஷ்யா கலாசார நட்புறவு கழகம் சார்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அந்த குழுவினர், மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமிற்கு வந்து கோயில் யானைகளை பார்த்து ரசித்தனர்.

முகாமிற்கு வந்த ரஷ்ய கலைஞர்களை முகாம் நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மிகவும் குளிர்பிரதேசமான ரஷ்யாவில் யானைகள் என்பதே இல்லாத நிலையில் இதுவரை பாடப் புத்தகங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே பார்த்த யானையை ரஷ்யா குழுவினர் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். முகாமில் யானைகள் குளிப்பது, உணவு உண்ணுவது, அசை போடுவது உள்பட அவை செய்யும் குறும்புகளை பார்த்து வியந்தனர். யானை குளிப்பாட்டும் இடங்களையும் பார்வையிட்ட ரஷ்ய குழுவினர் பாகன்களுடன் சேர்ந்து யானைகளை குளிக்க வைத்தனர்.

முகாமில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானை ரெட்டை திருப்பதி, லட்சுமி ரஷ்ய நாட்டு குழுவினரை வரவேற்கும் விதமாக மவுத் ஆர்கன் வாசித்து அவர்களை உற்சாகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து அக் குழுவினர், அந்த யானையுடன் நின்று தனித்தனியாகவும், குழுவாகவும் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Mettupalayam Camp ,artists ,Red Tirupathi Elephant ,Mouth Organ ,Russian , Mettupalayam, Mouth Organ, Tirupati Elephant
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த 30...