×

பழநி கோயில் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல்

பழநி: பழநி கோயிலில் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு இன்று நடந்தது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் ஆனது. இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து 13 வருடம் ஆகிறது. தொடர் பூஜை காரணமாக மூலவர் சிலையில் சாத்தப்பட்ட மருந்து கரைந்து விட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து மருந்து சாத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது கும்பாபிஷேக பணி பாலாலயம் செய்து துவங்கி உள்ளது.

இந்நிலையில் தற்காலிக அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 5.40 மணிக்கு விளாபூஜை, 6.30 மணிக்கு காலசந்தி மற்றும் சிறுகாலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு கலசபூஜை மற்றும் கலச அபிஷேகம், 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.

இதற்காக தர்மபுரம் ஆதீனத்திலிருந்து அஷ்டபந்தன மருந்து கலவை உருண்டை கொண்டு வரப்பட்டு உருக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தி சுவாமிக்கு சாத்தப்பட்டது. இதில் பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கன்பந்த் கிரான்ட் ஹரிஹரமுத்து, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், கட்டிடயவியல் வல்லுநர் நேரு, பாஜ நிர்வாகி திருமலைசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மருந்து சாத்துதல் நிகழ்வையொட்டி காலை 6.30 முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.


Tags : Palani , Palani Temple, Muller Faculty, Drugs
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்