×

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு: கார்த்தி சிதம்பரம் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. வருமானத்தை அதிகளவில் மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி கார்த்திக் சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றதில் மனு தொடர்ந்திருந்தனர்.  2015-2016 ஆண்டிற்கான வருமானத்தை மறைத்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தை விற்ற வருமானத்தை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுப்பப்பட்டது. ஒரு ஏக்கர் ரூபாய் 4 கோடி 25 லட்சம் என்ற விலையில் அக்னி எஸ்டேட் பவுன்டேசனுக்கு நிலத்தை கார்த்தி விற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விற்பனை ஒப்பந்தத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலையை ரூபாய் 3 கோடி என்று குறிப்பிட்டு உள்ளதாக கார்த்தி மீது வருமான வரித்துறை புகார் தெரிவித்தது.

இந்த வழக்கானது எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கு விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவிற்காக நாளை ( ஜனவரி 21) தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியும், மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரியும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர், நீதிபதி முன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கானது விசாரணைக்காக  பட்டியலிடப்பட்டு உள்ளது. ஆதலால் வழக்கு, விசாரணைக்கு வரும் போது தான் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியும். இன்று உடனடியாக அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர்.


Tags : Court ,Karthi Chidambaram , Income, Case, Karthi Chidambaram, Petition, Emergency Case, Icord Refusal
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...