×

பூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!


நமது பூமியைப் போலவே உள்ள ஓர் புதிய கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக ஒட்டுமொத்த பூமியும் மாறிவருகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் ஒருபுறம் புலம்பிக்கொண்டிருக்க, நமது சூரியக்குடும்பத்திற்கு அருகே வேறுஏதேனும் நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றனவா? சூரியனை எப்படி பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றி வருகிறதோ அதேபோல, மற்ற நட்சத்திரக்கூட்டங்களிலும் கிரகங்கள் சுற்றி வருகின்றனவா? அங்கும் பூமி போன்ற மனிதர்கள் வாழும் கிரகங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்று ஆராய்ந்து வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

அந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்காக டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் - அதாவது TESS என்ற விண்கலம் வடிவமைக்கப்பட்டு 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. பூமிக்கு அருகில் உள்ள TOI 700 நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்தது. அளவில் சூரியனைப் போன்று 40 சதவிகிதமும், 50 சதவீத வெப்பத்தையும் கொண்டுள்ள இந்த TOI 700 நட்சத்திரத்தைச் சுற்றிவரும் 3 கிரகங்களை இதுவரை கண்டறிந்துள்ளது TESS. அவற்றிற்கு TOI 700b, TOI 700c,TOI 700d  என்று பெயரிட்டுள்ளது.  இதில் முதல் இரண்டு கிரகங்களின் சுற்றுப்பாதைகளும் TOI 700 நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமானவை. ஆனால் கோல்டிலாக்ஸ் மண்டலம் என்று அழைக்கப்படும் பகுதியில் d மட்டுமே உள்ளது. 3வது சுற்றுப்பாதையில் சுற்றிவரும் TOI 700d பூமியை ஒத்த அளவுடையதாக இருப்பதை டெஸ் கண்டறிந்துள்ளது. இது, நட்சத்திரத்திலிருந்து வெகு தொலைவிலும் இல்லை, மிக நெருக்கமாகவும் இல்லை.

அதாவது, சூரியனை புதன் மற்றும் வெள்ளி கோள்கள் முறையே முதலாம் மற்றும் 2ம் சுற்றுவட்டப்பாதையிலும், அதனைத் தொடர்ந்து 3வது சுற்றுவட்டப்பாதையில் பூமியும் சுற்றிவருவதைப்போல TOI 700d-ம், 3வது சுற்றுவட்டப்பாதையில் அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.  TOI 700 d கிரகம், 37 நாட்களில் அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இது சூரியனிடமிருந்து பூமி பெறும் ஆற்றலில் 86 சதவீதத்தைப் பெறுகிறது. இந்த கிரகத்தின் வெப்பநிலை ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருக்கும் அளவிற்கு ஏதுவாக அமைந்திருப்பதால், அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த கிரகம் பூமியைப்போலவே,  ஒரு நிலையான நாளில் அதன் நட்சத்திரத்தை எதிர்கொள்கிறது, அதாவது ஒருபக்கம் ஒளி நிறைந்த பகல் மற்றும் மறுபக்கம்  இரவாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். அதேசமயம், அந்த கிரகத்தின் நிச்சயமற்ற தன்மைகளையும் சந்தேகிக்கின்றனர் விஞ்ஞானிகள்.  TOI 700 d  கிரகம் ஒரு வேளை பூமியைப்போன்ற ஒரு பாறை உலகமாக இல்லாமல் சுவாசிக்க இயலாத வாயுக்களால் சூழப்பட்டிருக்குமோ என்றும் ஆராய வேண்டியிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை நாசா முழுவதுமாக ஆராய்ந்து மனிதர்கள் வாழும் சூழல் இருந்தால், பூமியை காலிசெய்து விட்டு அங்கு குடிபோக பல கோடி பேர் இப்போதே தயாராகிவிடுவார்கள் என்பது தான் உண்மை.

Tags : Earth ,Discovery , Earth, planet, invention
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...