×

நாகர்கோவில் மாநகராட்சியில் 14 இடங்களில் செயலாக்க மையம்: காய்கறி கழிவுகள் நுண் உரமாக மாற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கும் கழிவுகளை நுண் உரமாக மாற்றி, ஒரு கிலோ ரூ. 1க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். நாகர்கோவில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் 14.5 ஏக்கரில் அமைந்துள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. வலம்புரிவிளையில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருவதை தடுக்கும் வகையில், மாநகருக்கு உட்பட்ட மற்ற இடங்களிலும் திடக்கழிவு மேலாண்மை மூலம், நுண் உரம் செயலாக்க மையம் அமைக்க ஆணையர் சரவணக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில், 14 இடங்களில் நுண் உரம் செயலாக்க மையம் செயல்படுகிறது. மேலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் செயலாக்க மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வார்டு வாரியாக சேரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட நுண் உரம் செயலாக்க மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.  மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்படுகிறது. பின்னர் தொட்டியில் காய வைத்து பின்னர் உரமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ ரூ.1 க்கு விற்பனை ஆகிறது. வாழைத் தோட்டம், ரப்பர் தோட்டம், தென்னந்தோப்புகள் உள்ளிட்டவற்றுக்கு டன் கணக்கில் இந்த உரத்தை விவசாயிகள் வாங்கி செல்கிறார்கள். இயற்கையான உரம் என்பதால், விவசாயிகள் மத்தியில் வரவேற்பும் உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 8, 9, 31, 45 ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வடசேரி ராஜபாதை பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் உரமாக மாற்றப்படுகிறது. துப்புரவு பணியாளர்கள் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வாங்கி வருகிறார்கள். இவ்வாறு வாங்கி வரும் மக்கும் குப்பைகளை ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி, அவற்றில் இரும்பு துண்டுகள், மேலும்மக்காத கழிவுகள் இருக்கிறதா? என்பதை  பணியாளர்கள் சோதனை செய்கிறார்கள். இரும்பு துண்டுகளை கண்டுபிடிக்க காந்தம் பயன்படுத்துகிறார்கள்.  அவற்றில் இரும்பு துண்டுகள், பிளாஸ்டிக்  தொடர்பான எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின், அவற்றை அரவை இயந்திரங்களில் செலுத்துகிறார்கள். சுமார் 40 நாட்கள் வரை அதற்கான தொட்டியில் காய வைக்கப்படுகிறது. பின்னர் உரமாக விற்பனை செய்கிறார்கள்.

இந்த பணிகளை மேற்பார்வையிட்டு வரும் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் கூறுகையில், ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குப்பைகள் தேங்குவதை தடுக்க வீடுகள், ஓட்டல்களில் இருந்து வரும் மக்கும் கழிவுகள் உரமாக மாற்றப்படுகின்றன. தொடக்கத்தில் 1 கிலோ உரம் ரூ.5க்கு விற்பனை செய்தோம். பின்னர் விவசாயிகளின் நலன் கருதி, ஆணையர் உத்தரவின் பேரில் 1 கிலோ ரூ.1க்கு விற்பனையாகிறது. தவுடு , உமி, சாம்பல் போன்றவை கலந்து, முழுக்க, முழுக்க இயற்கை உரமாக இருப்பதால், விவசாயிகள் அதிகம் வாங்கி செல்கிறார்கள். வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கும் வாங்குகிறார்கள். இதன் மூலம் ரசாயனம் கலந்த உரங்களால் ஏற்படும் தீமைகளில் இருந்து தப்ப முடியும் என்றார்.

புழுக்களை சாப்பிடும் கோழிகள்

நுண் உரம் செயலாக்க மையத்தில் கழிவுகள்  அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்ட பின், தொட்டிகளில் காய வைக்கின்றனர். அப்போது அதில் ஏராளமான புழுக்கள் உருவாகும். இந்த புழுக்களை உட்கொள்வதற்காக கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டுக்கோழிகள், வான் கோழிகள், கருப்பு கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் குப்பைகளில் உள்ள புழுக்களை உட்கொள்கின்றன. ஈ தொல்லைகளில் இருந்து தப்ப, 90 லிட்டர் தண்ணீர், 5 கிலோ வெல்லம், 2 லிட்டர் தயிர் கொண்டு கரைசல் தயாரித்து ஸ்பிேர ஆக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த கழிவுகளில் ஈக்கள் இருப்பதில்லை.

மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள்

உணவு கழிவுகள், பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள், மலர் கழிவுகள், இறைச்சி மற்றும் மீன் கழிவுகள், முட்டை ஓடு, தோட்டக்கழிவுகள் மக்கும் கழிவுகளாகும். நெகிழி, பாலித்தீன் பைகள், கண்ணாடி, தெர்மாகோல், காகிதம், அட்டை, இரும்பு துண்டுகள், பழைய துணி, ரப்பர் மற்றும் தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் கழிவுகள் மக்காத கழிவுகள் ஆகும். சானிட்டரி நாப்கின், டயாப்பர்கள், வர்ணம் மற்றும் பூச்சு கழிவுகள், எண்ணெய் மற்றும் எண்ணெய் கலன்கள், பயன்படுத்திய மற்றும் சேதமடைந்த மின் கலன்கள், பிளேடு, சேவிங் செட், சிரிஞ்ச் போன்றவைகள், பூச்சி கொல்லி கலன்கள், மருத்துவ மற்றும் காலாவதியான மருத்துவ கழிவுகள் அபாயகரமான கழிவுகள் ஆகும்.

பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

நுண் உரம் செயலாக்க மையத்தில் விற்பனை செய்யப்படும் தொகையை, அந்தந்த பகுதிக்குட்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் அந்த செயலாக்க மையத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கையுறை மற்றும் உபகரணங்கள் கொண்டு தான் குப்பைகளை அள்ள வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தி இருக்கிறார்.

Tags : Processing Center ,locations ,Nagercoil Municipality Transition , Transition into micro fertilizer
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு