×

வெளிநாட்டில் இருந்து மது, சிகரெட் கொண்டு வர புதிய கட்டுப்பாடு: மத்திய நிதியமைச்சகத்திற்கு வர்த்தகத்துறை அமைச்சகம் பரிந்துரை

புதுடெல்லி: வெளிநாடு சென்று திரும்புவோர், மது பாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான அளவுகளில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும்படி மத்திய நிதியமைச்சகத்திற்கு வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. 2020 - 2021ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பல்வேறு தரப்பிலும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்த ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்கு பல்வேறு வழிகளை மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து மதுபானம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வர கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் இனிவரும் 2020 - 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் இதனை அமல்படுத்துமாறு மத்திய நிதி அமைச்சகத்திற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.

அதன்படி வெளிநாட்டிற்கு சென்று திரும்பும் பயணிகள் ஒரு மது பாட்டிலை மட்டுமே கொண்டு வர முடியும். அதேபோல வெளிநாடுகளில் இருந்து சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வருவதற்கும் தடை விதிக்க மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. பல நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 1 லிட்டர் வரையிலான மதுபாட்டிலை மட்டுமே கொண்டுவர அனுமதி இருக்கிறது. முன்னதாக வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 2 மதுபாட்டில்கள் மற்றும் 10 சிகரெட் பாக்கெட்டுகளை கொண்டு வர முடியும். இது தவிர பேப்பர், காலணிகள், ரப்பர் பொருட்கள், பொம்மைகள் உள்ளிட்டவற்றிற்கு சுங்க வரியை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க முடியும் என்று வர்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.

Tags : Ministry of Commerce ,Ministry of Finance , Foreign Affairs, Liquor, Cigarette Control, Ministry of Finance, Ministry of Commerce, Recommendation
× RELATED போதைக்காக புதிய போதை வஸ்துக்களை...