×

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களுக்கு வானமே கூரையானது

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்- சேய் மகப்பேறு வார்டில் சிகிச்சைக்காக வருபவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு போதிய இடவசதியில்லாததால் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். மகளிர் மகப்பேறு மருத்துவப்பிரிவு மற்றும் தாய்சேய் நலப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் உள்ளனர்.

இந்த மருத்துவமனைக்கு நெல்லை மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களுடன் வருபவர்கள் வார்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக தாய் சேய் நலப்பிரிவு வளாகத்தில் சிகிச்சைக்கு வருபவர்களின் உறவினர்கள், கட்டிடத்தின் எதிரே உள்ள திறந்தவெளி பகுதியில்தான் வானமே கூரையாக நினைத்து அமர்ந்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். சிலர், 10 முதல் 20 நாட்கள் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறும் நிலையில் அவர்களது உறவினர்களும் அதுவரை மூட்டை, முடிச்சுகளுடன் வெயிலிலும், மழையிலும் காத்து கிடக்கின்றனர். கைக்குழந்தைகளுடன் வருவோர், அங்குள்ள மரக்கிளைகளில் தொட்டில் கட்டி தூங்க வைக்கின்றனர். மற்றவர்கள் தரையிலேயே படுத்துக் கொள்கின்றனர்.

தாய் -சேய் நலப்பிரிவில் இருந்து நோயாளிகளின் உறவினர்களின் பெயர்களை ஸ்பீக்கர் மூலம் அழைக்கின்றனர். அவர்கள் மட்டும், வார்டுக்குள் தற்காலிகமாக சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு வரலாம் என அவர்கள் வெளியேவே காத்திருக்கின்றனர். மேலும் அவ்வப்போது மருந்து, மருத்துவ பரிசோதனை சீட்டு போன்றவை வாங்க செல்ல வேண்டியிருப்பதால் அவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாத நிலையிலும் உள்ளது. ஒரு நோயாளிக்கு குறைந்தது இருவராவது வெளியே காத்திருக்கின்றனர். திறந்தவெளியில் இரவு தூங்கும்போது பாதுகாப்பிலும் சிக்கல் உள்ளது. செல்போன், பணம், பொருட்கள் திருட்டு நடப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

நோயாளிகளின் உறவினர்கள் குளிப்பதற்கு அருகிலுள்ள கட்டண குளியலறையில் ரூ.25 வசூலிக்கப்படுகிறது. இங்கு துணிகளை அலசுவதற்கு அனுமதியில்லை. இயற்கை உபாதைகளுக்கும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி நோயாளிகளின் உதவிக்கு வரும் உறவினர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே தகுந்த அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

‘‘கட்டண சுகாதார வளாகம் கட்டுங்கள்’’

நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், தாய்-சேய் நலப்பிரிவில் நோயாளிகள் மற்றும் தாய்மார்களின் நலன் கருதி உள்ளே எங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் நாங்கள் பாதுகாப்பாக இருக்க அறை ஏதும் இல்லை. இந்த பகுதியில் திறந்தவெளி கூரையாவது அமைக்க வேண்டும். குளியலறை மற்றும் சுகாதார வளாகம் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக இப்பகுதியில் கட்ட வேண்டும். இதற்கு கட்டணம் வசூலித்தாலும் பரவாயில்லை. குழந்தைகள், மகளிர் வார்டுகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் அதேவேளை உடன் வந்திருப்பவர்கள் தினமும் சந்திக்கும்  சங்கடங்களை மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்து உரிய வசதிகளை செய்து தரவேண்டும், என்றனர்.

துறை தலைவருடன் ஆலோசித்து முடிவு

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், ஏற்கனவே முன்பகுதியில் காத்திருப்பு ஷெட் கட்டிக் கொடுக்கப்பட்டது. அங்கு ஸ்பீக்கர் தகவல் வசதியும் உள்ளது. இதேபோல் கூடுதல் கான்கிரீட் ஓய்வறையும் உள்ளது. ஆனால் அங்கு காத்திருக்காமல் புதிய கட்டிடம் முன் காத்திருக்கின்றனர். இதனால் காத்திருப்பு ஷெட்டில் பலர் இருசக்கர வாகனத்தை நிறுத்துகின்றனர். இந்த நிலை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உறவினர்கள் காத்திருக்க கூடுதல் ஷெட் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை தலைவருடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும், என்றார்.

Tags : relatives ,Paddy Government Medical College Hospital ,Government Medical College , Government Medical College
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...