சேலம் அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் அசத்தல்

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்த 58 வயதான சிவலிங்கம் கடந்த 15ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தும் பயனளிக்காத நிலையில் 19ம் தேதி அதிகாலை 1 மணியளவில் சிவலிங்கம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இனி அவர் காப்பாற்றவே முடியாத நிலைமையை அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த துக்க நிலையிலும் தனது தந்தையின் உடலுறுப்புகளை தானம் செய்யவந்தார் அவரது மகன் ராமலிங்கம்.

உடனடியாக மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு இந்த தகவலை தெரிவித்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆலோசனைப்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பெரியசாமி தலைமையிலான மருத்துவர்கள் குழு மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறுப்புகளை அகற்றும் பணியை தொடங்கியது. 2அரை மணி நேரத்தில் இருதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. சென்னை மகாத்மா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 56 வயதான ஒரு நபருக்கு பொருத்த விமானம் மூலம் இருதயம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2 சிறுநீரகங்களில் 1 கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 52 வயது நபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையிலேயே அனுமத்திக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞருக்கு பொருத்தப்பட்டது.

உடலுறுப்பு அகற்றப்பட்டு 6 மணிநேரத்திற்குள் பொருத்தப்படவேண்டும் என்ற விதிப்படி, தானம் பெற்ற அனைவருக்கும் வெற்றிகரமாக உரிய நேரத்தில் உடலுறுப்பு  பொருத்தப்பட்டு தற்பொழுது அவர்கள் நலமாக உள்ளனர். கல்லீரல் மற்றும் அது பொருத்தப்பட இருந்தவரின் உடல்நிலை ஒத்துவராததால், கைவிடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் முதல்முறையாக நடைபெற்ற இந்த சாதனை குறித்து பேசிய மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன், உடலுறுப்பு தானம் செய்ய ஒருவர் முன்வந்ததன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்கிறார். மூளைச்சாவு ஏற்பட்ட சிவலிங்கம் எந்தவித நோயும் இல்லாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை எளிமையாக முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Tags : Surgery ,Salem Government Hospital: Government Doctors Salem Government Hospital ,Government Doctors , Salem, Government Hospital, Body Donation, Surgery
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை