×

அரசுக்கு பணம் கொட்டும் பலரின் வேலை பறிபோகும்: செல்லப்பா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தமிழக மாநில தலைவர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 1.55 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு 5 வருடமாக 4ஜியை கொடுக்கவில்லை. மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். 300 எம்பிக்களிடம் 4ஜி சேவை வழங்கக்கோரி மனு அளித்தோம். 3 முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். எங்களுடைய கடுமையான எதிர்ப்பின் மூலம் பிஎஸ்என்எல். நிறுவனத்தை தனியாருக்கு விற்க முடியாமல் தடுத்து நிறுத்தி வந்தோம்.
பிஎஸ்என்எல்.லில் விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் 78 ஆயிரம் பேரை இந்த மாதம் முதல் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். இவர்கள் எல்லாரும் நிறுவனத்துக்காக இரவு பகலாக உழைத்தவர்கள். இவர்கள் குடும்பங்களின் நிலையை அரசு கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விட்டு, விற்பனை செய்ய தயாராகி விட்டது. பிஎஸ்என்எல்.லை புத்தாக்கம் செய்துள்ளோம். 4ஜி கொடுக்கிறோம் என்று தொலைதொடர்பு துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். பொதுவாக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க கடுமையான முயற்சியை எடுத்து வருகிறது. உதாரணமாக, பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்டை எடுத்து கொள்ளுங்கள். இது லாபத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இதேபோல், மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை 150 ரயில் வழித்தடங்களை தனியாருக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்படி அடுத்தடுத்து விற்பனை செய்வது  என்பது அரசுக்கு வேண்டுமானால் பல லட்சம் கோடி கொட்டும்; ஆனால், பல லட்சம் பேர் வாழ்வாதாரம் பறிபோகும்.

பாஜக அரசின் உண்மையான கொள்கை என்னவென்றால் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது என்பது தான். இதற்கு, புதிய பொருளாதார கொள்கையை செய்கிறோம் என்று கூறுகிறார்கள். தனியாருக்கு ஆதரவான கொள்கையை கடைபிடிக்கிறார்கள். வங்கிகளை இணைக்கிறார்கள். குறிப்பாக, இரும்பு தொழிற்சாலை உள்ளிட்ட லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்க முயற்சியை மேற்கொள்கிறார்கள். இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இதனால், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுவார்கள். இதேபோல், அனைத்தையும் தனியாருக்கு கொடுத்துவிட்டால் அதன்மூலம் கிடைக்கக்கூடிய லாபம் அரசுக்கு வராது. ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் அரசுக்கு வரி கிடைக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதன் மூலம் விலைவாசி ஏறும். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலை அனைத்தையும் தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

339 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு குறித்த பணிகளை பொதுத்துறை நிறுவனங்கள் மிகச்சரியாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகிறது. இதில், 72யை தவிர மற்ற அனைத்தும் லாபத்தில் இயங்கக்கூடிய நிறுவனங்கள் ஆகும். இதை தனியாருக்கு ஏன் விற்க வேண்டும் என்பதே இங்கு கேள்வியாக உள்ளது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கொள்கையை மத்திய அரசு கடைபிடிப்பதன் மூலமே நாம் மிகப்பெரிய பிரச்னையை கையாண்டு வருகிறோம். வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகும்.

குறிப்பாக, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை மிகக்குறைவான சம்பளத்தில் வேலைக்கு எடுப்பார்கள். இதனால், அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை. கொஞ்சம், கொஞ்சமாக அரசு ஊழியர்களை வெளியே அனுப்பி பொதுத்துறை நிறுவனத்தை முழுமையாக தனியார் வசம் ஒப்படைப்பதே மத்திய அரசின் திட்டம். இப்படி இல்லை என்றாலும் இதை நேரடியாகவும் தனியாருக்கு கொடுக்கவும் முடிவு செய்வார்கள். இதை எதிர்த்து தான் தொழிலாளர் வர்க்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும். தனியார் வசம் சென்றால் அடக்குமுறை இருக்கும்.

Tags : Chellappa ,Government ,many ,BSNL Employees Union , government, money, work of many, pluck and go
× RELATED ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் அதிமுகவில்...