×

அத்தியாவசிய சேவைகளை தனியார் மயமாக்குவது ஆபத்து: சரவணபவன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயல்தலைவர்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி சரியானதல்ல. பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் ஆதாரங்கள். நாட்டை வளப்படுத்துவதற்கு, அந்த நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று பங்குகளை விற்க வேண்டும் என்பது சரியானதல்ல. பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்தால் தொழிலாளர்களின் நலன் மேம்படாது. லாபநோக்கத்துடன் மட்டுமே இந்த விஷயத்தை அரசு அணுகக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களிடம் நிறைய சொத்துக்கள் உள்ளது. தனியார்மயமாக்கப்பட்டால், அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பெட்ரோலிய பொருட்களுக்கு விலையேறினால் அதை கட்டுக்குள் வைக்க கார்ப்பன்ட் என்கிற நிதி ஒன்று இருந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சிதம்பரம் காலத்தில் அதை எடுத்துவிட்டார்கள். அது இருந்திருந்தால் விலை உயரும் நாட்களில் அதிலிருந்து கொடுத்திருப்பார்கள். குறிப்பாக எங்களது சங்கத்தை பொருத்தவரை எண்ணெய் நிறுவனங்கள் ஆகட்டும் வேறு நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படக்கூடாது. எண்ணெய் பொருட்கள் என்பது அத்தியாவசிய பொருளாகவுள்ளது. இதனால் மற்ற பொருட்களின் விலை உயர்வதற்கான வாய்ப்புள்ளது. இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

ரயில்வே சேவை மனப்பான்மையுடன் இயங்கும் நிறுவனம். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் எத்தனை இருக்கைகள் உள்ளது. எந்தனை டிக்கட் கொடுக்கிறார்கள் என்ற விபரம் நமக்கு தெரியாது. சில ரயில்களில் இடமே இருக்காது. ஆனால் டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்நிலையில் தனியாருக்கு ரயில்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டால், இத்தனை டிக்கட் மட்டும் தான் நாங்கள் அனுமதிப்போம் என்ற நிலை வந்தால், மக்களுக்கு பெரிய பாதிப்பாக இருக்கும்.
மக்கள் நலனுக்காக சில முக்கிய விஷயங்களில் மாற்றங்கள் தேவை. ஆனால் நமது நாட்டுக்கு உகந்ததா என பார்த்து செயல்படுத்த வேண்டும்.அரசால் செய்ய முடியாத விஷயங்கள் சில உள்ளது. உதாரணத்திற்கு சாலைகளை தனியார் போட்டார்கள். அவ்வளவு பெரிய முதலீடுகளை அரசால் முதலில் போட முடியாது. அப்ேபாது அதுபோன்ற இடங்களில் தனியாருக்கு கொடுக்கலாம். அதுவே இன்று சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திக்கொண்டு இருக்கிறோம். அது பெரிய பாதிப்பாகத்தான் உள்ளது.

தொலைநோக்கு பார்வையுடன் தேவை இருக்கும் இடங்களில் கொண்டுவருவதில் தப்பு இல்லை. ஏசி கோச்சில் தனியாரை கொண்டுவந்தால் தப்பில்லை. அடிப்படையான 3ம் வகுப்பு,  சிலிப்பர் போன்ற இடங்களில் தனியார் மயமாக்கப்பட்டால், மக்களுக்கு தான் பாதிப்பு. லாபநோக்கத்துடன் தான் செயல்படும். கூடுதலாக ஏசி ரயில்கள் விடுகிறார்கள் என்றால் தனியாக செய்தால் பிரச்னையில்லை. விமானத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் சுவிதா போன்ற டிக்கட்டுகள் உள்ளது. அதுபோன்ற விஷயங்கள் நிறையவுள்ளது. மக்களுக்கான அடிப்படை விஷயங்களில் தனியார் மயம் என்பதை கொண்டுவந்து அதன்மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால், அது எந்தகாலத்திலும் நடக்காது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் முதலாளிகள் முதலாளிகளாகத்தான் இருப்பார்கள். முதலீடு போடுகிறார்கள்; அதனால்,  லாபம் வேண்டும் என்று தான் பார்ப்பார்கள். அரசாங்கம் மட்டும் தான் சேவை மனப்பான்மையுடன் செயல்படமுடியும். அதனால் அடிப்படையான அத்தியாவசிய சேவை துறைகளை தனியார் மயமாக்குவது மக்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் ஆபத்தாக தான் முடியும்.

Tags : Saravanabhavan ,Bharathiya Mastur Sangam State Executive ,Privatization ,Sarvanapavan , Essential Services, Privatization, Risk, Sarvanapavan
× RELATED திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாருக்கு பாராட்டு