×

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, மக்கள் அனைவரும் சாலை  விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “சாலைப் பாதுகாப்பு வாரம்”  கடைபிடிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு, 31வது சாலைப் பாதுகாப்பு வார விழா 20ம் தேதி(நேற்று) முதல் 27ம் தேதி வரை (26.1.2020 நீங்கலாக) கடைபிடிக்கப்படும். இச்சாலைப் பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி 2016ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2020ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 50% குறைத்திட வேண்டும் என்ற இலக்கை அடைய, தமிழக அரசு, மேற்கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2019ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.60% என்ற அளவிலும், சாலை விபத்தால்  ஏற்படும் உயிரிழப்புகள் 43.10% என்ற அளவிலும்  குறைந்துள்ளன.  மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019ம் ஆண்டில் 3 நபர்களாக குறைந்துள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு  வருகின்றன.
சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திடவும், “விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

Tags : road ,deaths ,road accidents ,Edappadi Palanisamy , Chief Minister , Edappadi Palanisamy , requests ,avoid deaths , due to road accidents
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...