×

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: 1010ம் ஆண்டு மாமன்னர் ராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன. ‘தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23ம் தேதி தஞ்சையில் மாநாடு நடத்துவது என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு அறிவித்தது. இந்த மாநாடு வெற்றி பெற மதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாமன்னர் ராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி; தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; தமிழ் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்கப் பீடம் 18 அடி; தமிழ் மெய் எழுத்துக்கள் 18. சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி; தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247. இவ்வாறு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்குப் பெருவிழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் ஆகும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

Tags : Tanjay Peruvaaru ,Tamil ,Vaiko , In the temple, manner , Tamil language , vaiko
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....