×

மாமல்லபுரத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த, மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாமல்லபுரத்தில் தினமும் உடற்பயிற்சி, தியானம் செய்தல், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட விழிப்புணர்வை வலியுறுத்தி மாமல்லபுரம் குங்பூ தற்காப்பு கலை மையம் மற்றும் தனியார் ஓட்டல்கள் இணைந்து 4 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தை நேற்று நடத்தியது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை குங்பூ தற்காப்பு கலை பயிற்சி மைய தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் பஞ்சா, தனியார் ஓட்டல் இயக்குனர் டி.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலையில், திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபாணி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த மாராத்தான் ஓட்டம் கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, ஐந்துரதம் சாலை, கலங்கரை விளக்கம் சாலை, பாட சாலை வழியாக சென்று தலசயன பெருமாள் கோயிலை சென்றடைந்து. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி இந்த மாரத்தான் ஓட்டத்தில் சீன நாட்டு பயணிகள், உள்நாட்டு சுற்றுலா பயணிகள், பெண்கள், சிறுவர்கள், தற்காப்பு கலை வீரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழி நெடுகிலும் எலுமிச்சம் பழ சாறு வழங்கப்பட்டது. முக்கியமாக பள்ளி சிறுவர்கள் பலர் ஆர்வமுடன் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். பிறகு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Tags : Mamallapuram ,Tourist Group , Mamallapuram, awareness, marathon run, tourists
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ