×

பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் அந்தரத்தில் தொங்கும் மின்கம்பம்

* அச்சுறுத்தும் மின்பெட்டி
* அதிகாரிகள் மெத்தனம்

பெரம்பூர்: வடசென்னை பகுதியில் சாலையோரங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் பெட்டிகள் பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், பிளாட்பாரங்களின் நடுவில் பாதசாரிகளுக்கு இடையூறாகவும் உள்ளன. இவற்றில் இருந்து மின் இணைப்புக்காக அமைத்துள்ள ராட்சத மின் வயர்கள் தரையில் ஆபத்தான முறையிலும் கிடக்கின்றன. மக்கள் தினந்தோறும் அதை தாண்டியும், மிதித்தும் செல்கின்றனர். குழந்தைகள் இந்த உயரழுத்த மின் வயரின் ஆபத்தை உணராமல் அதன்மீது நடந்து செல்கின்றனர். இதனால், மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பல இடங்களில் மின் விளக்குகளுக்காக அமைக்கப்பட்ட கம்பங்கள் துருபிடித்து வலுவிழந்து காணப்படுகின்றன.

பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று கான்கிரீட் தூண் இல்லாமல், வெறும் போல்ட் மற்றும் நட் போட்டு முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்தரத்தில் தொங்குவது போல் உள்ள இந்த மின்கம்பம் எந்த நேரத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அதனை கடந்து செல்கின்றனர். மேலும், இதன் அருகிலேயே பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மின்பெட்டி உள்ளது. அந்தப் பெட்டியில் இருந்து உயரழுத்த மின்வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் தரையில் கிடக்கிறது. பாதசாரிகள்  இதனை தாண்டியும், மிதித்தும் ஆபத்தான முறையில் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் மின்தடை, திறந்தவெளி மின்பெட்டி, தாழ்வான மின்கம்பிகள், சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்து புகார் தெரிவிக்க மின்வாரியத்திற்கு போன் செய்தால் முறையான பதிலளிப்பதில்லை. வீடுகளில் மின் பிரச்னை குறித்து தெரிவித்தால் கூட தனியார் எலெக்ட்ரீஷியன்களை வைத்த பார்த்துக் கொள்ளுங்கள். எங்களால் செய்ய முடியாது என கூறுகின்றனர். சாலையில் ஆங்காங்கே உயரழுத்த மின்வயர்கள் தரையில் ஆபத்தான முறையில் கிடக்கின்றன. மின் பெட்டிகள் தாழ்வாகவும், பாதசாரிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. இதை சரி செய்ய சொன்னால், இதற்கு அதிகம் செலவாகும். அதற்கெல்லாம் இப்போது நிதி இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பில்லாத இந்த மின் கம்பமும் எப்போது விழும் என்று தெரியவில்லை. எனவே உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Perampur Melapatti Ponnappan Street ,corner , Perampur, Melapatti Ponnappan, street, hanging, wiring
× RELATED கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகரிப்பு