×

கடும் நஷ்டத்தில் இருந்து மீள ஒரே வழி இதுதான் காப்பீடுகளின் பிரீமியம் அதிகரிக்குமா? ஒழுங்குமுறை ஆணையம் பகீர் தகவல்

புதுடெல்லி: காப்பீடுகளுக்கு இனி அதிக பிரீமியம் செலுத்த வேண்டிய நிலை வரலாம். நிலைமை அப்படி. இல்லாவிட்டால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும் அபாய எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது. இருக்கும் சம்பளத்தில் வரி, கடன் வட்டி போக அவசர காலத்தில் ஆபத்பாந்தவனாக உதவுவது காப்பீடுகள்தான். மருத்துவ காப்பீடுகள், விபத்து காப்பீடுகள் பல ரகங்களில் உள்ளன. நோய்களின் தன்மைக்கு ஏற்பவும், காப்பீடு பெறுபவரின் உடல் நிலை, வயதுக்கு ஏற்பவும் மருத்துவ காப்பீடுகளுக்கு பிரீமியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. குடும்பத்துக்கு சேர்த்து காப்பீடு செய்யும்போதும், குழந்தைகளுக்கு பொதுவாக 25 வயது வரை குடும்ப காப்பீட்டில் சேர அனுமதி வழங்கப்படுகிறது. இதில், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, அதில் மூத்தவர்கள் எத்தனை பேர் எனவும், உடல் நல குறைபாடு உள்ளதா என்பதற்கு ஏற்ப பிரீமியம் தொகை மாறுபடும்.

குறைந்த பட்சம் 5 லட்சம் ரூபாய்க்காவது காப்பீடு செய்திருந்தால்தான், மருத்துவ காப்பீட்டுக்கான பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், சிகிச்சையின் பெரும்பகுதி நோயாளிகளே ஏற்க வேண்டி வரும். ஆனால், 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டுக்கு பிரீமியம் ஆண்டுக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை கட்ட வேண்டி இருக்கும். இதற்கே விழி பிதுங்குகிறதே என புலம்புவோருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில், நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டிய நிலையில் காப்பீடு துறை தத்தளித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுபாஷ் குந்தியா இரண்டு நாள் முன்பு அளித்த ஒரு பேட்டியில் குறிபிட்டிருந்தார். அதாவது, மருத்துவ காப்பீடாக இருந்தால், காப்பீடு நிறுவனங்களின் பிரீமியம் வசூலில் சுமார் 43 சதவீதம் வரை புரோக்கர்களுக்கே சென்று விடுகிறது. இப்படி கமிஷன் பெரும்பகுதி போய்விட்டால், எப்படி பாலிசிதாரர்களின் மருத்துவ செலவுகளை ஏற்க முடியும். எனவே, பிரீமியம் தொகையை உயர்த்தாவிட்டால் காப்பீடு நிறுவனங்களால் கடும் நஷ்டத்தை தொடர்ந்து தாங்க முடியாது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என எச்சரித்திருந்தார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே ஏற்பட்ட கட்டண போட்டி காரணமாக, சில நிறுவனங்கள் நஷ்டம் தாங்காமல் மூடப்பட்டு விட்டன. ஜியோ வருகைக்கு பிறகு பல ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்த ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்தன. இதில் அரசு உதவாவிட்டால், வோடபோன் நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுபோல்தான், காப்பீடு நிறுவனங்களிடையேயும் போட்டி காணப்படுகிறது. இதனால்தான், ஏஜென்டுகளை கவர கணிசமான தொகை கமிஷனாக கொடுக்கப்படுகிறது. தற்போது மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. நவீன உணவு மற்றும் வாழ்க்கை முறையால் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பிரீமியம் கட்டும் பெரும்பாலானோர் ஆண்டுக்கு ஒரு முறை கூட மருத்துவ சிகிச்சைக்கு சேர்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், காப்பீடு பிரீமியம் கட்டணத்தை உயர்த்துவது கட்டாய தேவை ஆகிவிட்டது. எனவே, காப்பீடு பிரீமியம் உயர்த்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என காப்பீடு நிறுவன வட்டாரத்தில் சிலர் கூறுகின்றனர். பெரும்பாலான காப்பீடு ஏஜென்டுகள் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை. காப்பீடு நிறுவனங்கள் அதிக கமிஷனால் பாதிக்கப்படுகின்றன.  இந்த நிலையை தவிர்க்க, பல்வேறு வகையாக உள்ள ஒழுங்குமுறைகளை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. காப்பீடு மிகவும் அவசியம். அதிலும் மருத்துவ காப்பீடு அனைவருக்கும் தேவையான ஒன்று. இந்த துறை சீர்கெடாமல் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம். இதற்கேற்ப விதிமுறைகளை அமைக்க வேண்டும் என ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

* காப்பீடு பிரீமியத்தில் ஏஜென்டுகளுக்கு கமிஷன் மட்டுமே கணிசமான அளவுக்கு போய்விடுகிறது. சில மருத்துவ காப்பீடுகளுக்கு 43 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படுகிறது.
* நிறுவனத்தை தக்க வைக்க அதிக கமிஷன் கொடுத்து, காப்பீடுதாரருக்கு சலுகைகள் வழங்குவது மிகவும் கடினம்.
* இதேநிலை தொடர்ந்தால், நஷ்டத்தை தவிர்க்க காப்பீடு பிரீமியத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம். இல்லாவிட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கதிதான் ஏற்படும்.
* காப்பீடு துறையை காப்பாற்ற வேண்டியது அவசியம். இதற்கேற்ப விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

Tags : Heavy Loss, Recovery One Way, Insurance, Premium, Regulatory Authority, Information
× RELATED தங்கம் விலை சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது