×

தூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்: வேலை இழப்பால் வருமானமின்றி தவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அழிந்து வரும் உப்பு உற்பத்தியால் தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு முத்து மற்றும் உப்பு இரண்டும் பெருமை சேர்க்கின்றன. இதில் முத்து குளிக்கும் தொழில் முற்றிலும் அழிந்து விட்டது. இரண்டாவது உப்பு உற்பத்தி. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும், அனல்மின் நிலையங்கள்,  பெருகி வரும் ரசாயன தொழிற்சாலைகள், வாகனத்தில் இருந்து வெளிப்படும் மாசு காரணங்களால் உப்பு உற்பத்தியும் வெகுவாக குறைந்து வருகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பை நம்பியே அனேக தொழிற்சாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக தோல் பதனிடும் தொழிற்சாலைகள், மீன்களை பதப்படுத்துதல் மற்றும் கெமிக்கல் தொடர்பான தொழில்களுக்கு உப்பு பயன்படுகிறது.

இந்தியாவுக்கு தேவையான உப்பு பெரும்பாலும் நமது நாட்டிலேயே தயாராகிறது. நாட்டில் உப்பு உற்பத்தியில் முதலாவதாக குஜராத்தும், அடுத்ததாக தமிழ்நாடும் விளங்குகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்பட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளத்தூர், வேப்பலோடை, தருவைகுளம், முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு உள்பட கடற்கரையோரமுள்ள பகுதிகளில் உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கடலில் இருந்து நேரடியாக உப்பளங்களுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது கடற்கரையோரங்களில் பெருகிவரும் அனல்மின் நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், குடோன்களால் தண்ணீர் கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கிணறுகள் அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு வருகின்றனர்.

மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள், வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகைகள் மற்றும் புழுதி உப்பளத்தின் மீது படிந்து விடுவதால் உப்பின் தரம் குறைந்து மாசு ஏற்படுகிறது. இதனால் போதிய விலையின்றி விற்பனை பாதிக்கிறது. உப்பு உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், உப்பு உற்பத்திக்கு தேவையான நீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்களுக்கு வருடத்தில் பாதி நாட்கள்தான் வேலை இருக்கும், மழைகாலங்களில் வேலை இருக்காது. ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் உப்பு உற்பத்தி அறவே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உப்பு தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வறுமையில் வாடுகின்றனர்.

Tags : Thoothukudi ,The Loss , Thoothukudi, salt industry, job loss
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...