×

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிய சாப்ட்வேர் மூலம் ஆய்வு நடத்தி 300 ஆராய்ச்சிக்கட்டுரைகள் நிராகரிப்பு: காப்பி அடித்தது அம்பலமானதால் சிக்கலில் மாணவ, மாணவிகள்

வேலூர்: பிளேஜரிசம் சாப்ட்வேர் மூலம் எம்.பில்., பி.எச்டி. பட்டங்கள் பெற சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 300 ஆய்வு கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரிகள் துறை சார்ந்த எம்.பிஎல்., பி.எச்டி படிக்கும் மாணவர்கள் அதற்கான ஆய்வு கட்டுரைகளை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கும்போது அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும். இதற்காக நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளில் பிளேஜரிசம் என்ற  சாப்ட்வேர் மூலம் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுக்குட்படுத்தப்படும். இதன்மூலம் ஆய்வு கட்டுரைகள் பிறரிடம் இருந்து அப்படியே காப்பியடிக்கப்பட்டதா? அல்லது மாணவர்கள் தாங்களாகவே ஆய்வு செய்து அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளார்களா? என்பது கண்டறியப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த  சாப்ட்வேர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், மேற்கண்ட படிப்புகளை படிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் துறை சார்ந்து தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நடைமுறையும் தற்போதுதான் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த தகுதித்தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு, 25 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே எம்.பில்., பி.எச்டி. படிக்க முடியும். ஆனால், சமீபத்தில் நடந்த தகுதித்தேர்வில் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை கல்லூரிகள் வாயிலாகவும், நேரடியாகவும் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தனர். இக்கட்டுரைகள் அனைத்தும் பிளேஜரிசம்  சாப்ட்வேர் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 300 ஆய்வு கட்டுரைகள் பிறரின் ஆய்வுக்கட்டுரைகளை சார்ந்தோ, அக்கட்டுரைகளை அடிப்படையாக கொண்டோ தயாரிக்கப்பட்டவையாக இருந்ததால் அவை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் பி.எச்டி., எம்.பில் கனவில் இருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக தரப்பில் கேட்டபோது, ‘பி.எச்டி., எம்.பில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆய்வு செய்வதற்கு என்று தனி  சாப்ட்வேருடன் தனி இயக்குனரகமும் பல்கலையில் செயல்பாட்டில் உள்ளது. சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் 20 சதவீதத்துக்கும் மேல் ஏற்கனவே வெளியான ஆராய்ச்சி கட்டுரைகளுடன் ஒத்து இருந்தால் அக்கட்டுரைகள் நிராகரிக்கப்படும். சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கட்டுரைகள் 40 சதவீதம் வரை ஏற்கனவே வெளியான ஆய்வு கட்டுரைகளுடன் ஒத்து போனதால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் அக்கட்டுரைகளை மீண்டும் மறுசீராய்வு செய்து கட்டுரைகளை மறுபடியும் சமர்ப்பிக்கலாம். அந்த வாய்ப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

Tags : Vellore Tiruvalluvar University , Vellore, Tiruvalluvar University, New Software, Rejection
× RELATED ரயில்வே முன்பதிவிற்கான ஆன்ட்ராய்டு...