×

ஆந்திர மாநில தலைநகரை அமராவதியிலிருந்து மாற்ற வேண்டாம்: முதல்வர் ஜெகனுக்கு சந்திரபாபு வேண்டுகோள்

புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆந்திரா அழிவுப்பாதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடனில் உள்ள ஆந்திர அரசு, ஒப்பந்தங்களை மதிக்கவில்லை. இது மாநிலத்தின் கவுரவத்தை பாதிக்கும். முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள். எதிர்கால முதலீடுகள் பாதிக்கப்படும். 3 தலைநகரங்கள் அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இது தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிரான அரசின் சதித்திட்டம்.
அமராவதியில் தலைநகரத்துக்கான கட்டுமானங்கள் எல்லாம் முடியும் நிலையில் உள்ளன. ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

மருத்துவமனை முதல் கல்வி நிலையங்கள் வரை 130 நிறுவனங்கள் வர உள்ளன. தலைநகரை மாற்றினால், இதெல்லாம் நடக்காது. அமாராவதியை மேம்படுத்த ஏற்கனவே ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகளுக்காக 5 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் 3 ஆயிரம் கோடி செலவழித்தால் எல்லா பணிகளும் முடிந்து விடும். இந்நிலையில், தலைநகரை மாற்றினால் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படும். கட்டுமானம் தொடங்கிய நிலங்களை மீண்டும் விவசாயத்–்துக்கு பயன்படுத்த முடியாது. 33 ஆயிரம் ஏக்கர் நிலம் அளித்த விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.4 லட்சம் கோடி.  அமராவதியை தலைநகராக மாற்றுவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆந்திர பிரிவினைக்கு பின், கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த சிவராம கிருஷ்ணன் கமிட்டி பரிந்துரைகள் அடிப்படையிலேயே அமராவதி தலைநகரம் உருவாக்கப்பட்டது. அதனால், தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற வேண்டாம் என முதல்வர் ஜெகன் மோகனிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சந்திரபாபு கூறினார்.

Tags : Amravati Chandrababu ,Andhra Pradesh ,capital ,Amravati , Andhra, Amravati, CM Jagan, Chandrababu, plea
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...