×

தாயிடம் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து மீட்ட ரயில்வே ஊழியருக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு..!!

மும்பை: தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவிற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பை வாங்கனி ரயில் நிலையத்தில் கடந்த 17ம் தேதி பார்வையிழந்த பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் நடந்து சென்றார். அப்போது நிலை தடுமாறி தண்டவாளத்தில் குழந்தை விழுந்துவிட்டது. அதே தண்டவாளத்தில் ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்ததால் அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அப்போது புயலாக பாய்ந்து வந்த மயூர் ஷெல்கே என்ற இருப்பு பாதை பராமரிப்பு ஊழியர் தனது உயிரை சற்றும் பொருட்படுத்தாது நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்றி நடைமேடையில் சேர்த்ததுடன் அவரும் உயிர் பிழைத்தார். குழந்தையை ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே காப்பாற்றிய பரபரப்பான காட்சி நாடு முழுவதும் பரவியதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ரயில்வே மும்பை மண்டல அலுவலகத்திற்கு மயூரை வரவழைத்த உயரதிகாரிகள், கைகளை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், மயூர் ஷெல்கே தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய காணொளியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, மும்பை வாங்கனி ரயில் நிலையத்தை  சேர்ந்த ரயில்வேமேன் மயூர் ஷெல்கேவின் செயலை பார்த்து மிகவும் பெருமையடைகிறேன். தனது உயிரை பணயம் வைத்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ஷெல்கேவின் செயலை எந்தவொரு பரிசு அல்லது பணத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் மனிதநேயத்தை ஊக்கப்படுத்தியதற்காக அவருக்கு வெகுமதி கிடைக்கும் என்றும் கூறினார்.  மயூர் ஷெல்கேவின் துணிச்சலான செயலை பாராட்டிய ரயில்வேத்துறை ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கி கவுரவித்திருக்கிறது.  இதுகுறித்து மயூர் ஷெல்கே தெரிவித்ததாவது, குழந்தையின் தாய் பார்வையற்றவர் என்பதால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனடியாக தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை நோக்கி நான் ஓடினேன். எனது உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தபோதும் குழந்தையை காப்பாற்றி விட முடியும் என்று நம்பி ஓடி சென்று காப்பாற்றினேன். குழந்தையின் தாயார் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எனக்கு நன்றி கூறினார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் தொலைபேசியில் அழைத்து என பாராட்டு தெரிவித்தார் என குறிப்பிட்டார். …

The post தாயிடம் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து மீட்ட ரயில்வே ஊழியருக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Piyush Goyal ,Mumbai ,Railway Minister ,Mayur Shelke ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...