×

கருவேலமரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு: மரங்களை அகற்ற கோரிக்கை

மானாமதுரை: கருவேலமரங்களால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே மரங்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை ரிங்ரோடு அருகே உள்ள வைகை பாலத்திலிருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை நாணல்கள், கருவேலமரங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. மானாமதுரை வழியாக பரமக்குடி வரை செல்லும் வைகை ஆறு நகரை இரண்டாக பிரிக்கிறது. ஆற்றினை ஒட்டிய 13 வார்டுகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இக்குடியிருப்புகளில் உள்ள கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் வற்றியதே இல்லை.

ஆனால் சில ஆண்டுகளாக திருப்புவனம், லாடனேந்தல், சிறுகுடி உள்ளிட்ட ஆற்றின் அதிக மணல் வளமுள்ள பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு பெருமளவு மணல் அள்ளப்பட்டதால் தற்போது வைகையாற்றில் மணலை காண்பது அரிதாகியுள்ளது. போதாக்குறைக்கு நாணல்கள், கருவேலமரங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால் இடைவெளியின்றி நெருக்கமாக வளர்கின்றன. இவற்றை அழிக்க தவறியதின் விளைவாக கோடைகாலம் துவங்கும் முன்பே மானாமதுரை தாலுகாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இடைக்காட்டூர், ராஜகம்பீரம் பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் 40க்கும் மேற்பட்ட குடிநீர்கிணறுகள் உள்ளன.

கருவேலமரங்களின் ராட்சத வளர்ச்சியினால் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு நீர் ஊற்றுகள் வற்றும் நிலைக்கு சென்று வருகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பிரபாகரன் கூறுகையில்,‘‘மானாமதுரை பகுதியில் வைகையாறு சுகாதாரகேட்டால் மாசடைந்துள்ளது. ஆற்றில் தேங்கியுள்ள கழிவுநீர், கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுசூழல் பாதிப்புஏற்பட்டுள்ளது. மேலும், அதிகளவு  கருவேலமரங்களால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மரங்களை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Removal , Kurvelam tree, ground water, impact
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...